லிஸ்பன்: யூயேஃபா நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் ஸ்காட்லாந்தை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது போர்ச்சுகல்.
இந்த முதல் பிரிவு ஆட்டத்தில் முதலில் ஒரு கோல் வித்தியாசத்தில் தோற்றுக்கொண்டிருந்த போர்ச்சுகல், மீண்டுவந்து வெற்றிகண்டது.
ஆட்டத்தில் மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ 88வது நிமிடத்தில் வெற்றி கோலைப் போட்டார். அந்தக் கோல், ரொனால்டோ தனது காற்பந்துப் பயணத்தில் போட்ட 901வது கோலாகும்.
ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் ஸ்காட் மெக்டோமினே ஸ்காட்லாந்தை முன்னுக்கு அனுப்பினார். 1980ஆம் ஆண்டுக்குப் பிறகு போர்ச்சுகலை வெல்லாதிருந்த ஸ்காட்லாந்து 44 ஆண்டுகளுக்குப் பிறகு பெருமூச்சு விடக் காத்திருந்தது.
ஆனால் 54வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் போர்ச்சுகலின் புரூனோ ஃபெர்னாண்டஸ்.
அதன் பின்னர் விழுந்தது ரொனால்டோவின் கோல்.
மூன்றாம் பிரிவில் சுவிட்சர்லாந்தை 4-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது யூரோ 2024 கிண்ணத்தை வென்ற ஸ்பெயின். அப்பிரிவின் மற்றோர் ஆட்டத்தில் டென்மார்க், செர்பியாவை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது.