போர்ச்சுகல் காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 39, புதிய யூடியூப் ஒளிவழி ஒன்றை புதன்கிழமை (ஆகஸ்ட் 21) தொடங்கியிருக்கிறார்.
தொடங்கப்பட்டு 90 நிமிடங்களுக்குள், அது ஒரு மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைப் பெற்றது. அடுத்த ஆறு மணி நேரத்திற்குள், அது ஈர்த்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஆறு மில்லியனைத் தாண்டியது.
அந்த ஒளிவழியின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக்கொண்டே இருந்தது. தொடங்கப்பட்டு ஒருநாள் முடிவதற்குள் அது 10 சந்தாதாரர்களை ஈர்த்துள்ளது. இதன்மூலம் ரொனால்டோ யூடியூப் ஒளிவழி, பழைய சாதனையை முறியடித்துள்ளது.
தற்போது கிட்டத்தட்ட 12 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருக்கும் ரொனால்டோவின் யூடியூப் ஒளிவழியில் சேர்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த ஒளிவழியில் ரொனால்டோ 11 குறுங்காணொளிகளை வெளியிட்டுள்ளார்.
தற்போது சவூதி அரேபியா காற்பந்து லீக்கில் அல் நசர் குழுவுக்காக விளையாடி வரும் ரொனால்டோ, ஐந்து முறை Ballon D’Or விருதை வென்றுள்ளார்.