செயின்ட் லூசியா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடித் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், 37, அனைத்துலகப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
டி20 உலகக் கிண்ணத் தொடரில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிச் சுற்று வாய்ப்பை இழந்த நிலையில், வார்னரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்மூலம் ஓர் ஆட்டக்காரராக அவரது 15 ஆண்டுகால அனைத்துலக கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வந்துள்ளது.
செயின்ட் லூசியாவில் திங்கட்கிழமையன்று (ஜூன் 24) இந்திய அணிக்கு எதிராக நடந்த டி20 உலகக் கிண்ண ‘சூப்பர் 8’ சுற்று ஆட்டமே அவரது கடைசி ஆட்டமாக அமைந்தது. அந்த ஆட்டத்தில் அவர் ஆறு ஓட்டங்களை மட்டுமே எடுத்தார்.
கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பரில் இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் ஆஸ்திரேலிய அணி வாகை சூடியதும் ஒருநாள் போட்டிகளிலிருந்து வார்னர் ஓய்வுபெற்றார். பின்னர் 2024 ஜனவரியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் அவர் விடைபெற்றார்.
அனைத்துலக அளவில் வார்னர் 112 டெஸ்ட், 161 ஒருநாள், 110 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அப்போட்டிகளில் மொத்தம் 18,995 ஓட்டங்களை அவர் குவித்துள்ளார். அவற்றில் 49 சதங்களும் 98 அரைசதங்களும் அடங்கும்.
இந்நிலையில், ஐபிஎல், பிக் பேஷ் லீக் போன்ற டி20 தொடர்களில் வார்னர் தொடர்ந்து விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.