பியூனஸ் அயரிஸ்: 1978 உலகக் கிண்ணத்தை வென்ற அர்ஜென்டினா அணியின் உறுப்பினரான முன்னாள் தற்காப்பு வீரர் லூயிஸ் கால்வன் திங்கட்கிழமை (மே 5) தனது 77வது வயதில் காலமானதாக அர்ஜென்டினா காற்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
கால்வன் பல வாரங்களாக நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கோர்டோபாவில் உள்ள ரெய்னா ஃபேபியோலா மருத்துவமனையில் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அர்ஜென்டினா காற்பந்து சங்கமும் அதன் தலைமையும் மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றன” என்று சங்கம் மே 5ஆம் தேதி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1978ஆம் ஆண்டு பியூனஸ் அயரிசில் நடந்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வென்றதில் கால்வன் தற்காப்பு ஆட்டக்காரராக விளையாடினார்.
1982ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியிலும் அர்ஜென்டினாவைப் பிரதிநிதித்தார். தேசிய அணிக்காக மொத்தம் 34 போட்டிகளில் விளையாடினார். 1983ஆம் ஆண்டு அனைத்துலகப் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி கூறியது.