லண்டன்: இங்கிலாந்தின் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் மூன்றாம் சுற்று ஆட்டத்தில் ஆர்சனலை வென்றது நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் யுனைடெட்.
ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் யுனைடெட்டின் டியோகோ டாலோ தப்பாட்டம் காரணமாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு நீக்கப்பட்டார். அதுவரை அணித்தலைவர் புருனோ ஃபெர்னாண்டசின் கோல் மூலம் முன்னணியில் இருந்தது யுனைடெட்.
டாலோ வெளியேற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே ஆர்சனலின் கேப்ரியல் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார். அதன் பின்னர் மனவுறுதியுடன் விளையாடி ஆட்டத்தைக் கூடுதல் நேரம் வரை எடுத்துச் சென்ற பிறகும் பெனால்டிகளில் வெற்றிபெற்றது யுனைடெட்.
அடிக்கடி விளையாடாத யுனைடெட்டின் துருக்கிய கோல் காப்பாளர் அல்டாய் பயிண்டர் அபாரமாக விளையாடினார். 72வது நிமிடத்தில் ஆர்சனல் அணித்தலைவர் மார்ட்டின் ஓடகார்ட் எடுத்த பெனாடில்டியையும் அவர் தடுத்தார்.
அதோடு, ஆர்சனலுக்குக் கிடைத்த பல கோல் வாய்ப்புகளையும் தடுத்தார் பயிண்டர். யுனைடெட்டின் தற்காப்பு வீரர்களான ஹேரி மெகுவாயர், மத்தேயஸ் ட லிக்ட், லிசாண்ட்ரோ மார்ட்டினெஸ் ஆகியோரும் மிகுந்த கவனத்துடன் சிறப்பாக விளையாடி ஆர்சனலை எதிர்கொண்டனர்.
வெற்றியாளர்களைத் தீர்மானிக்கக் கூடுதல் நேரத்துக்குப் பிறகு ஆட்டம் பெனால்டிகள் வரை சென்றது. அதில் 5-3 என யுனைடெட் வென்றது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆர்சனலுக்கு எதிராக யுனைடெட் பெரிதும் தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூடுதல் நேரத்தையும் சேர்த்து ஒரு மணிநேரத்துக்கும் மேல் ஒரு விளையாட்டாளர் குறைவாக இருந்தபோதும் ஆர்சனலின் சொந்த மண்ணான எமிரட்ஸ் விளையாட்டரங்கில் வெற்றிபெற்றது யுனைடெட்.
மற்றோர் எஃப்ஏ கிண்ண மூன்றாம் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்துக் காற்பந்தின் அதிகாரபூர்வ லீக்குகளில் இடம்பெறாத குழுவான (non-league side) டேம்வர்த், பிரிமியர் லீக் குழுவான டோட்டன்ஹம் ஹார்ட்ஸ்பருக்குப் பெரும் தலைவலியைத் தந்தது. அந்த ஆட்டத்தில் ஸ்பர்ஸ், கூடுதல் நேரத்தில் ஒருவழியாக 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது.
தொடர்புடைய செய்திகள்
90வது நிமிடத்தில் ஆட்டம் கோலின்றி சமநிலையில் இருந்தது.