பேங்காக்: 2018ஆம் ஆண்டு, 13 வயது சிறுவன் தானி ஆண்டிகா ரசாலி சிங்கப்பூரின் ஓசிபிசி அரங்கில் ஒரு ரசிகராக இருந்தார்.
சொந்த மண்ணில் நடந்த உலக சீலாட் கற்காப்புக் கலை வெற்றியாளர் போட்டியில் ஷேக் ஃபெர்தவுஸ் ஷேக் அலாவுதீன் மற்றும் ஷேக் ஃபர்ஹான் ஷேக் அலாவுதீன் போன்றவர்கள் உலக வெற்றியாளர்களாக முடிசூட்டப்பட்டதைப் பிரமிப்புடன் பார்த்து, அந்த விளையாட்டின் மீதான அவரது ஆர்வம் தூண்டப்பட்டது. மேலும் அவர் இந்த விளையாட்டில் ஓர் அங்கமாக இருக்க விரும்பினார்.
புதன்கிழமை (டிசம்பர் 17) அன்று, தானி தனது முதலாவது தென்கிழக்காசிய விளையாட்டுகளில் தங்கப் பதக்கத்தை வென்ற பிறகுதான் சீலாட் விளையாட்டுக்குத் தான் சொந்தமானவர் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்ற உறுதியுடன் இருந்தார். முவாங் தோங்கில் உள்ள இம்பாக்ட் அரினா கண்காட்சி அரங்கில், 20 வயதான தானி, 45 கிலோவுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தன்டிங் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தோனீசியாவின் கொய்ருடின் முஸ்தாக்கிமை 41-21 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.
இந்தப் போட்டிகளில் சிங்கப்பூர் சீலாட் அணி வென்ற ஒரே தங்கம் இதுவாகும். இந்தோனீசியா நான்கு தங்கம், ஒரு வெள்ளி, ஏழு வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. மூன்று தங்கம், நான்கு வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்ற தாய்லாந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது என்று தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின் அதிகாரபூர்வ இணையத்தளம் தெரிவித்தது.

