சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து நட்சத்திர வீரர் மகேந்திர சிங் டோனி ஓய்வை அறிவித்துள்ளார். இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக டோனி தொடர்வார்.
2027ஆம் ஆண்டுக்கான வீரர்கள் தக்கவைப்பு தொடர்பாக முடிவெடுப்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நவம்பர் 15ஆம் தேதி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தியது.
அப்போது எந்தெந்த வீரர்களை விடுவிக்க வேண்டும், தக்கவைக்க வேண்டும் என ஆலோசனை நடத்தப்பட்டது.
அதில் பங்கேற்ற டோனி, விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலில் தன்னையும் சேர்த்துக்கொள்ளுமாறும் தாம் ஓய்வுபெற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் ரூபா குருநாத், இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
45 வயதான டோனி, கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து காயங்களால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் ஐபிஎல் போட்டிகளில் அவரது பங்களிப்பு படிப்படியாகக் குறைந்தது.
2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில்கூட அவரால் விளையாட முடியவில்லை.
கடந்த 2020ஆம் ஆண்டு அனைத்துலகக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக இன்ஸ்டகிராம் பதிவு மூலம் அறிவித்திருந்த டோனி, தற்போது ஐபிஎல் பயணத்துக்கும் விடைகொடுத்துள்ளார்.
உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணித் தலைவரான டோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் வெற்றியாளர் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.
சிஎஸ்கே அணிக்காக அவர் 5,314 ஓட்டங்களைக் குவித்துள்ளார். மொத்தம் 272 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக அவர் களமிறங்கியுள்ளார்.
