தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டோனியால் பத்து ஓவர்கள் பந்தடிக்க முடியாது: பயிற்றுவிப்பாளர் விளக்கம்

2 mins read
ff9f79db-c294-43e3-96b3-5a5873c03251
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 11 பந்துகளில் 16 ஓட்டங்களை எடுத்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் டோனி. - படம்: ஏஎஃப்பி

கௌகாத்தி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் டோனி ஒன்பதாவது வீரராகக் களமிறங்கியது எதிரலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர ஆட்டக்காரருமான டோனி முன்னதாகவே களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கக்கூடாது என்று அவ்வணியின் பயிற்றுநர் ஸ்டீஃபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) நடந்த ஆட்டத்தில், 25 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில்தான் டோனி ஏழாவது வீரராகக் களமிறங்கினார்.

டோனி பின்வரிசையில் களமிறங்குவதற்கு அவரது உடற்தகுதியே காரணம் என்கிறார் ஃபிளமிங்.

“டோனியின் உடல், குறிப்பாக அவரது முழங்கால்கள் முன்னைப்போல் இல்லை. அவரால் பத்து ஓவர்கள் களத்தில் நின்று, ஓட முடியாது. அதனால், குறிப்பிட்ட நாளன்று அவரால் என்ன தர முடியும் என்று அவர்தான் தீர்மானம் செய்வார். வாய்ப்பு வரும்போது மற்ற வீரர்களுக்கும் அவர் ஆதரவாக உள்ளார்.

“தலைமைத்துவத்திலும் விக்கெட் காப்பிலும் அவர் எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைக் கடந்த ஆண்டே சொன்னேன். அதனால் 13, 14வது ஓவரிலிருந்து, அதுவும் களத்தில் யார் இருக்கிறார் என்பதைப் பொறுத்து அவர் முடிவுசெய்வார்,” என்று ஃபிளமிங் விளக்கினார்.

ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 183 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய சென்னை அணி 176 ஓட்டங்களை மட்டும் எடுத்துத் தோற்றுப்போனது. அந்த ஆட்டத்தில் டோனி 11 பந்துகளில் 16 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

கடந்த 2023 ஜூன் மாதம் மும்பை மருத்துவமனை ஒன்றில் டோனி முழங்கால் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

இதனிடையே, ஐந்து முறை வெற்றியாளரான சென்னை அணி, தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்ற பின்னர், பெங்களூரு, ராஜஸ்தான் என அடுத்தடுத்து இரு அணிகளிடம் தோல்வியைச் சந்தித்துள்ளது.

“மூன்றில் ஒரு போட்டியில் வென்றுள்ளோம். இது மோசமான நிலையன்று. தோல்வியிலிருந்து மீண்டெழுவதுதான் முக்கியம்,” என்று ஃபிளமிங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்