தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல் தொடக்கம்: முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு மோதல்

2 mins read
167b7d8b-449e-4609-b78c-030a460c6155
சென்னை அணியின் முன்னாள் தலைவர் டோனியும் (இடது) இந்நாள் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட்டும். - படம்: ஊடகம்
multi-img1 of 3

சென்னை: ஐபிஎல் எனப்படும் இந்திய பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 17வது பருவம் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) தொடங்குகிறது.

சென்னை சேப்பாக்கம் அரங்கில் இடம்பெறும் முதல் போட்டியில் நடப்பு வெற்றியாளரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்தாடவுள்ளது.

பத்து மாதங்களுக்குமுன் ஐந்தாவது முறையாக ஐபிஎல் கிண்ணத்தைக் கைப்பற்றிய நிலையில், மீண்டும் திடலுக்குத் திரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் டோனிமீதுதான் அனைவரின் கவனமும் உள்ளது.

அதுபோல், பெங்களூரு அணிக்காக விளையாடிவரும் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராத் கோஹ்லிக்கும் இது முக்கியமான தொடர்.

ஐபிஎல் தொடர் முடிந்ததும் டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடக்கவுள்ளதால், அதற்கான இந்திய அணியில் கோஹ்லி இடம்பெறுவாரா என்பதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்படுவதன்மூலம் கோஹ்லி இந்திய அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்திக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிப் போட்டி மே மாதம் 26ஆம் தேதி நடைபெறும்.

இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்கவுள்ளதால், ஐபிஎல் தொடரின் முதல் இரு வாரங்களுக்கான போட்டி அட்டவணையே வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், எஞ்சிய போட்டிகள் வெளிநாட்டில் நடத்தப்படக்கூடும் எனப் பேச்சு அடிபட்டது. ஆனால், அத்தகைய திட்டம் ஏதும் இல்லை என்றும் ஐபிஎல் தொடர் முழுவதும் இந்தியாவிலேயே நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தெளிவுபடுத்தியுள்ளார்.

சென்னை அணிக்குப் புதிய தலைவர்

இதனிடையே, சென்னை அணியின் புதிய தலைவராக தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், 27, நியமிக்கப்பட்டுள்ளார்.

டோனிக்கு 42 வயதாகிவிட்ட நிலையில், இப்பருவம் தொடங்கும் முன்னரே ருதுராஜ் அணித்தலைவராக நியமிக்கப்படலாம் என ஊகத் தகவல்கள் வெளியாயின.

கடந்த 2022 பருவத்தில் ரவீந்திர ஜடேஜா சென்னை அணித்தலைவராக நியமிக்கப்பட்டபோதும் அம்முயற்சி பலனளிக்கவில்லை. அதனால், அப்பருவத்தின் இடையிலேயே டோனி மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்றது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்