டென்னிஸ் திடலுக்குள் புகுந்த நச்சுப் பாம்பு!

1 mins read
cfc43750-07d0-409a-a406-b5e9c03638e9
இதற்குமுன் இப்படியோர் அனுபவத்தை எதிர்கொண்டதில்லை என்றார் உலகின் முன்னாள் மூன்றாம் நிலை ஆட்டக்காரரான ஆஸ்திரியாவின் டோமினிக் தியம். - படம்: இபிஏ

பிரிஸ்பன்: டென்னிஸ் போட்டியின்போது கொடிய நச்சுப்பாம்பு ஒன்று திடலுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனால் ஆட்டம் 40 நிமிட நேரம் நிறுத்தப்பட்டது. பாம்பு பிடிப்பவர் வந்து அதனைப் பிடித்துச் சென்ற பிறகே மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

இச்சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிரிஸ்பன் அனைத்துலகப் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தின்போது நிகழ்ந்தது.

அமெரிக்கப் பொது விருது முன்னாள் வெற்றியாளரான ஆஸ்திரியாவின் டோமினிக் தியம், உள்ளூர் வீரர் ஜேம்ஸ் மெக்கேபுடன் மோதிய ஆட்டத்தின்போது அந்த அழையா விருந்தாளி திடீரென நுழைந்தார்.

“எனக்கு விலங்குகள் என்றால், அதுவும் அருகிவரும் விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும்,” என்றார் தியம்.

“ஆயினும், அது கொடிய நஞ்சு கொண்டது என்பதாலும் பந்து உதவிச் சிறுவர்களுக்கு அருகே சென்றதாலும் அபாயகரமான சூழல் நிலவியது. இதற்குமுன் இப்படி ஓர் அனுபவத்தை நான் எதிர்கொண்டது இல்லை. இதனை ஒருபோதும் மறக்க முடியாது,” என்று அவர் சொன்னார்.

அந்தப் பாம்பு கிட்டத்தட்ட அரை மீட்டர் நீளத்தில் இருந்தது.

தொடர்ந்து நடந்த ஆட்டத்தில், தியம் 2-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

குறிப்புச் சொற்கள்