லண்டன்: எட்டு வயதே நிரம்பிய பிரிட்டிஷ் இந்திய வம்சாவளிப் பள்ளிச் சிறுமி சதுரங்க விளையாட்டில் வரலாறு படைத்துள்ளார்.
குரோவேஷியத் தலைநகர் ஸாக்ரெப்பில் அண்மையில் நடந்த ஐரோப்பிய ‘பிளிட்ஸ்’ சதுரங்க வெற்றியாளர் போட்டியில், அருந்திறன் படைத்த சிறந்த பெண் விளையாட்டாளராக அறிவிக்கப்பட்டார் போதனா சிவானந்தன்.
கடந்த வார இறுதியில் நடந்த அப்போட்டியில், உலகின் சிறந்த சதுரங்க விளையாட்டாளர்கள் சிலருடன் மோதிய போதனா, ‘இன்டர்நேஷனல் மாஸ்டர்’ ஒருவரைத் தோற்கடித்தார்.
இவர் 13க்கு 8.5 புள்ளிகள் பெற்று, பட்டம் வென்றார்.
சதுரங்க மேதையாக விளங்கும் போதனாவிற்குச் சமூக ஊடகங்களில் பாராட்டு குவிகிறது. அவருடைய செயல்பாடு ‘நம்ப முடியாத’ வகையில் உள்ளது என்று முன்னணி விளையாட்டாளர்கள் புகழ்ந்துள்ளனர்.
“ஆட்டத்தில் வெல்ல என்னால் முடிந்த அளவிற்குச் சிறப்பாக செயல்பட முயல்வேன். சில நேரங்களில் வெற்றி கிடைக்கும்; சில நேரங்களில் வெல்ல முடியாமல் போகலாம்,” என்று ‘பிபிசி’ செய்தி நிறுவனத்திடம் சொன்னார் போதனா.
இவர் கொவிட்-19 பெருந்தொற்று முடக்கநிலையின்போதே சதுரங்கத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
சில மாதங்களுக்குமுன் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் தமது இல்லத்திற்கு அழைத்திருந்த இளம் சதுரங்க விளையாட்டாளர்கள் குழுவில் போதனாவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
போதனாவிற்குச் சதுரங்கமும் பயணம் செய்வதும் பிடிக்கும் என்றார் அவருடைய தந்தை சிவானந்தன்.

