ஆறு ஆண்டுகளாக வலைப்பந்தும் அதற்கு முன்னதாக மற்ற பல விளையாட்டுகளும் விளையாடிவந்த திமான்யா, 24, தந்தை அளித்த உந்துதலால் 17 வயதில் கராத்தேயில் சேர்ந்தார்.
“நானும் என் இரு உடன்பிறப்புகளும் தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்வது முக்கியம் என எங்கள் தந்தை கருதினார்,” என்றார் திமான்யா. இதையடுத்து மூவரும் ஒரே சமயத்தில் கராத்தே கற்றுக்கொள்ளத் தொடங்கினர்.
தன்னைச் சுற்றியிருக்கும் விளையாட்டாளர்களுக்குத் தன்னைவிடப் பல்லாண்டுகால அனுபவம் இருந்ததால் இருமடங்கு அதிகமாகப் பயிற்சி செய்தார் திமான்யா.
“என்னால் முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அவற்றைக் கடந்துவந்தேன். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு,” என்றார் திமான்யா.
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக வாரத்திற்கு ஆறு நாள்கள் குறைந்தது இரண்டு மணி நேரம் பயிற்சி செய்தார் திமான்யா. அதுபோக, உடற்பயிற்சிக்கூடத்திலும் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சியிலும் இவர் ஈடுபட்டார்.
2022ல் இவர் தன் முதல் அனைத்துலகப் போட்டியில் பங்கேற்றார். ஆகஸ்ட் மாதம் நடந்த எட்டாவது கொஜு-காய் உலகப் போட்டியில் தங்கம் வென்றார் திமான்யா. 2025 சிங்கப்பூர் தேசிய கராத்தே போட்டிகளில் ‘குமிட்டே’ (Kumite) பிரிவில் தங்கமும் ‘கட்டா’ (Kata) பிரிவில் வெண்கலமும் வென்றார்.
திமான்யா போன்ற திறன்மிக்கக் கராத்தே வீரர்களுக்கு சிங்கப்பூர் கராத்தே-டோ சங்கம் (Karate-Do Union of Singapore) தேசிய பயிற்சிகளை வழங்குகிறது. ஸ்போர்ட்எஸ்ஜி அமைப்பு, அவர்களுக்கு இயன்முறை மருத்துவ ஆதரவையும் உடற்பயிற்சிக்கூட வசதிகளையும் வழங்குகிறது.
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்குச் செல்லும் நான்கு சிங்கப்பூர் கராத்தே வீரர்களும் முதன்முறைப் பங்கேற்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
திமான்யாவின் தம்பி லெஷான் தேஸ்மிகா, 17, கராத்தேக்கான தேசியப் பயிற்சி அணியில் இருக்கிறார். எட்டாவது கொஜு-காய் உலகக் போட்டியில் இவர் ஜூனியர் பிரிவில் வெண்கலம் வென்றார்.
2025 சிங்கப்பூர் தேசிய கராத்தே போட்டிகளில் ‘குமிட்டே’, ‘கட்டா’ என இரு பிரிவுகளிலும் தங்கம் வென்றார்.
திமான்யாவின் தங்கை ஒனாயா தேவதனி, 20, 2023ல் சிங்கப்பூர் கராத்தே-டோ சங்கம் பள்ளிகளுக்கிடையே நடத்திய போட்டிகளில் ‘குமிட்டே’ பிரிவில் தங்கமும் ‘கட்டா’ பிரிவில் வெண்கலமும் வென்றார்.

