லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான ஆர்சனல் சார்பில் கடந்த எட்டு ஆண்டுகளாக விளையாடிவந்த நடுகள வீரர் முகம்மது எல்னெனி இப்பருவத்துடன் அக்குழுவைவிட்டு வெளியேறுவதாக அறிவித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் பெசல் குழுவிலிருந்து ஆர்சனலுக்கு இடமாறினார் எகிப்து நாட்டவரான எல்னெனி. அதற்காக ஆறு மில்லியன் வெள்ளி கைமாறியது.
ஆர்சனலுக்காக அவர் இதுவரை 161 முறை களமிறங்கியுள்ளார்.
முழங்கால் காயம் காரணமாக 2022-23 பருவத்தில் எட்டு ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார்,
இப்போது 31 வயதாகும் எல்னெனி. இப்பருவத்தில் அவர் ஆறு ஆட்டங்களில் மட்டுமே களமிறங்கினார்.
இந்நிலையில், ஆர்சனலைவிட்டு விலகும் முடிவை வெள்ளிக்கிழமையன்று (மே 17) ‘எக்ஸ்’ ஊடகம் வழியாக அவர் அறிவித்தார்.
ஆர்சனலுக்குப் பிறகு எக்குழுவிற்காக விளையாடப் போகிறார் என்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லை.