பரம வைரியை வீழ்த்தியது இங்கிலாந்து

2 mins read
cf4ef947-ee09-4a76-8b01-3190a7ce762d
ஆட்டத்தின் முதல் கோலை புகுத்திய இங்கிலாந்து நட்சத்திரம் ஸ்தர்லிங். படம்: ஏஃப்பி -

யூரோ2020: கடந்த யூரோ 1996 அரைஇறுதி சுற்றில் பெனால்ட்டிகளில் ஜெர்மனி குழுவிடம் தோல்வி கண்டதை இங்கிலாந்து காற்பந்து ரசிகர்கள் மறந்திட இயலாது.

அவ்வணியில் தற்போதைய இங்கிலாந்து நிர்வாகியான கெரத் சவுத்கேட் இடம்பெற்று பெனால்ட்டி வாய்ப்பை தவறவிட்டார்.

அந்த கசப்பான அனுபவம் தம் நினைவைவிட்டு போகும் வகையில் நேற்று வெம்பிலி அரங்கில் இங்கிலாந்து அணிக்கு அவர் குழுவின் நிர்வாகி என்ற பொறுப்பில் வெற்றியை தேடித் தந்தார்.

நேற்றைய 'ரவுண்ட் ஆப் 16' சுற்று ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி குழுவை வீழ்த்தி போட்டியின் கால்இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் இங்கிலாந்து தாக்குதல் ஆட்டக்காரர் ரஹிம் ஸ்தர்லிங் முதல் கோலை புகுத்தி தம் குழுவுக்கு முன்னணியை தேடித் தந்தார்.

ஆட்டம் முடியும் தருவாயில் தோமஸ் முல்லர் ஆட்டத்தை சம நிலைப்படுத்தும் அருமையான வாய்ப்பை நழுவவிட்டார்.

அதற்குள் ஆட்டத்தின் 86வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஹெரி கேன் மற்றொரு கோலை புகுத்தி இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.

மற்றொரு ஆட்டத்தில் யுக்ரேன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடன் அணியை வென்று போட்டியின் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

ஆட்டத்தின் 90வது நிமிட கோல் நிலவரம் 1-1 என்று நீடிக்க, கூடுதல் நேரத்திற்கு ஆட்டம் சென்றது.

ஆட்டத்தின் 98வது நிமிடத்தில் சுவீடன் தற்காப்பு ஆட்டக்காரர் சிவப்பு அட்டை பெற்றதை அடுத்து, சாதகமான நிலையை பயன்படுத்தி, 120வது நிமிடத்தில் யுக்ரேனின் ஆர்தம் டொவ்பெக் வெற்றி கோலை புகுத்தினார்.

கால்இறுதி சுற்றில் இங்கிலாந்து அணியும் யுக்ரேன் அணியும் மோதவுள்ளன.