இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக்: சிட்டியுடன் மோதும் லிவர்பூல்

2 mins read
82c57560-b586-4b12-8b5f-a160bf5ecee9
தொடர் தோல்விகளால் துவண்டிருந்த லிவர்பூல் கடந்த வாரம் ஆஸ்டன் வில்லாவை வென்று வெற்றிப்பாதைக்கு திரும்பியது. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முதலிடத்தைப் பிடிக்க முன்னணி குழுக்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

சனிக்கிழமை (நவம்பர் 8) இரவு மான்செஸ்டர் யுனைடெட், டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர், எவர்டன், ஆர்சனல், செல்சி உள்ளிட்ட முன்னணிக் குழுக்கள் விளையாடின.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) இரவு ஐந்து ஆட்டங்கள் நடக்கின்றன. அதில் நான்கு ஆட்டங்கள் சிங்கப்பூர் நேரப்படி இரவு 10 மணிக்கு நடக்கின்றன.

புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் உள்ள ஆஸ்டன் வில்லாவுடன் போர்ன்மோத் மோதுகிறது.

இப்பருவத்தில் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள போர்ன்மோத் குழு ஐந்து வெற்றி, மூன்று சமநிலையென 18 புள்ளிகளைக் குவித்து புள்ளிப்படியலில் ஐந்தாவது நிலையில் உள்ளது.

இரண்டு குழுவும் கடந்த வாரம் தோல்வியைத் தழுவின. அதனால் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற அவை போராடக்கூடும்.

மற்றோர் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் 12 மற்றும் 13வது இடத்தில் தத்தளிக்கும் பிரன்ட்போர்ட் குழுவும் நியூகாசல் குழுவும் பொருதுகின்றன.

கடந்த பருவத்தில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூகாசல் இப்பருவத்தில் தடுமாறுகிறது. பிரன்ட்போர்ட்டுக்கு எதிராக வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற நியூகாசல் திட்டமிடக்கூடும்.

கிறிஸ்டல் பேலசுடன் பிரைட்டன் மோதுகிறது. இரண்டு குழுக்களும் கடந்த வாரம் வெற்றியை ருசித்தன. அதனால் இந்த ஆட்டத்தில் இரு குழுக்களும் விட்டுக்கொடுக்காமல் விளையாடக்கூடும்.

இரவு 10 மணிக்கு நடக்கும் மற்றோர் ஆட்டத்தில் லீட்ஸ் குழுவும் நாட்டிங்ஹம் குழுவும் மோதுகின்றன.

நள்ளிரவுக்குப் பின் மான்செஸ்டர் சிட்டியுடன் லிவர்பூல் மோதுகிறது. ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி 12.30 மணிக்குத் தொடங்கப்படும்.

தொடர் தோல்விகளால் துவண்டிருந்த லிவர்பூல் கடந்த வாரம் ஆஸ்டன் வில்லாவை வென்று வெற்றிப்பாதைக்கு திரும்பியது. அதேபோல் சிட்டியும் முதலிடத்தைக் கைப்பற்ற தொடர்ந்து போராடி வருகிறது. அதனால் ஆட்டத்தில் அனல் பறக்கலாம்.

சனிக்கிழமை மாலை நிலவரப்படி இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் புள்ளிப்பட்டியலில் 25 புள்ளிகளுடன் ஆர்சனல் முதலிடத்தில் உள்ளது. சிட்டி 19 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. நடப்பு வெற்றியாளரான லிவர்பூல் 18 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்