லண்டன்: தற்போதைய இங்கிலிஷ் பிரிமியர் லீக் (இபிஎல்) பருவத்தின் இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 25) நடைபெறவுள்ளன.
லீக் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் முடிக்கும் குழுக்கள் அடுத்த பருவம் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் (யுசிஎல்) போட்டிக்குத் தகுதிபெறும். அப்படியிருக்கையில் லீக் விருதை வெல்வது உறுதியான லிவர்பூலும் பட்டியலில் இரண்டாம் இடத்தில் முடிப்பது கிட்டத்தட்ட உறுதியான ஆர்சனலும் சாம்பியன்ஸ் லீக்குக்குத் தகுதி பெற்றுவிட்டன. பட்டியலில் அடுத்த மூன்று இடங்களைப் பிடிப்பதற்கான போட்டியில் ஐந்து குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
தற்போது மான்செஸ்டர் சிட்டி, நியூகாசல் யுனைடெட், செல்சி, ஆஸ்டன் வில்லா, நோட்டிங்கம் ஃபாரஸ்ட் ஆகியவை பட்டியலின் மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம் இடங்களை வகிக்கின்றன. ஐந்தாம் இடத்தில் உள்ள செல்சிக்கும் ஏழாம் இடத்தில் உள்ள ஃபாரஸ்ட்டுக்கும் ஒரு புள்ளி வித்தியாசம்தான். அதேபோல், மூன்றாம் இடத்தில் உள்ள சிட்டியையும் ஆறாம் இடத்தில் உள்ள வில்லாவையும் பிரிப்பது இரண்டே புள்ளிகள்.
இந்த ஐந்து குழுக்களில் ஏதேனும் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை அடி சறுக்கினாலும் நிலைமை பெரிய அளவில் மாறலாம்.
இந்நிலையில், ஃபாரஸ்ட்டும் செல்சியும் மோதுகின்றன. இவ்விரு குழுக்களுக்கும் இந்த ஆட்டம் இப்பருவத்தின் ஆக முக்கியமானதாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக ஃபாரஸ்ட் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
வில்லா, பட்டியலில் 16வது இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட்டைச் சந்திக்கிறது. ஒவ்வொரு பருவமும் சாம்பியன்ஸ் லீக்குக்குத் தகுதிபெறும் என்று பலரும் எதிர்பார்க்கும் யுனைடெட்டுக்கு இந்தப் பருவம் பெரும் துயரத்தைத் தந்துள்ளது.
மற்றோர் ஆட்டத்தில் சிட்டியும் ஃபுல்ஹமும் மோதுகின்றன. கடந்த சுமார் 10 ஆண்டுகளாகக் கிண்ணங்களைக் குவித்து வந்த சிட்டி இம்முறை, லீக் விருதை வெல்லாதது மட்டுமின்றி எந்தக் கிண்ணத்தையும் வெல்லவில்லை. நியூகாசல், எவர்ட்டனைச் சந்திக்கிறது.
பிரிமியர் லீக்கில் கடைசி மூன்று இடங்களில் முடிக்கும் குழுக்கள் இபிஎல்லுக்கு அடுத்த நிலையில் இருக்கும் சாம்பியன்ஷிப் லீக்குக்கு இறங்கும். அப்படி இறங்குவது ஏற்கெனவே உறுதியாகிவிட்ட சவுத்ஹேம்ப்டன், ஆர்சனலைச் சந்திக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த சில ஆண்டுகளாக இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் அதிக போட்டி இல்லாதிருந்தது. நடுநிலை ரசிகர்களுக்கு இருந்த அந்தக் குறையை இந்தப் பருவம் தீர்த்துவைத்துள்ளது. நியூகாசல், வில்லா, ஃபாரஸ்ட் ஆகிய குழுக்கள் பெரிய குழுக்களை ஆட்டங்காணச் செய்தன.
பிரைட்டன், பிரென்ட்ஃபர்ட், ஃபுல்ஹம் போன்றவையும் நல்ல போட்டி தந்து பல அதிர்ச்சி தரும் தருணங்களை வழங்கின.