இபிஎல் காற்பந்து: பிடியை நழுவவிட்ட மேன்சிட்டி

இபிஎல் காற்பந்து: பிடியை நழுவவிட்ட மேன்சிட்டி

2 mins read
ae3df521-56fe-4f50-a4ed-9bc7b224f2ed
எவர்ட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார் மான்செஸ்டர் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

லிவர்பூல்: எவர்ட்டன் - மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுக்கள் திங்கட்கிழமை (மே 4) மோதிய பரபரப்பான இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இதனையடுத்து, இபிஎல் பட்டம் தங்கள் பிடியிலிருந்து நழுவிவிட்டதாக மேன்சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித்துள்ளார்.

“நாங்கள் இன்னும் நான்கு ஆட்டங்களில் ஆட வேண்டியுள்ளது. ஆனாலும், முன்னர் எங்கள் பிடியிலிருந்த பட்டம் இப்போது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை,” என்று அவர் கூறினார்.

எவர்ட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசித் தருணத்தில் ஜெரமி டோக்கு அடித்த கோல்மூலம் மேன்சிட்டி தோல்வியைத் தவிர்த்தது.

“தோல்வியைவிடச் சமநிலை மேலானது. நாங்கள் வெற்றி பெறவே விரும்பினோம். அதற்காகவே விளையாடினோம், நாங்கள் எப்படிப்பட்ட அணி என்பதைக் காட்டினோம். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம்,” என்று திரு கார்டியோலா கூறினார்.

அவரது கருத்தை எதிரொலித்த டோக்கு, “இந்த முடிவு வேதனை அளிப்பதாக உள்ளது. ஆனாலும், இன்னும் பல ஆட்டங்கள் உள்ளன. எது வேண்டுமானாலும் நடக்கலாம். நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இது எங்களுக்கும் எங்கள் ரசிகர்களுக்கும் நாங்கள் செய்ய வேண்டிய கடமை,” என்று நம்பிக்கையுடன் சொன்னார்.

தற்போது மேன்சிட்டியைவிட ஆர்சனல் குழு ஐந்து புள்ளிகள் அதிகம் பெற்று பட்டியலின் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில், அக்குழுவிற்கு மூன்று ஆட்டங்களே எஞ்சியுள்ளன.

இருப்பினும், வெஸ்ட் ஹேம், பர்ன்லி, கிரிஸ்டல் பேலஸ் எனப் பட்டியலின் கடைநிலைகளில் உள்ள குழுக்களையே அது எதிர்த்தாட இருக்கிறது. அம்மூன்று ஆட்டங்களிலும் அக்குழு வென்றுவிட்டால் பட்டமும் அதன் கைக்குச் சென்றுவிடும்.

அது நடந்தால், இபிஎல் பட்டத்திற்கான அதன் 22 ஆண்டுகாலக் காத்திருப்பு நனவாகும்.

இபிஎல் பட்டம் கைசேராது போனாலும் மேன்சிட்டி குழு எஃப்ஏ கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது. மே 16ஆம் தேதி நடக்கவுள்ள இறுதி ஆட்டத்தில் அது செல்சி குழுவுடன் பொருதவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்