காரசாரமான இபிஎல்: ஆறாம் இடத்தில் நியூகாசல்

1 mins read
e11a98a3-9d9b-4eed-b91e-f2973d829faa
ஆட்டத்தின் ஒரே கோலைப் போடும் நியூகாசலின் புரூனோ கிமாரா‌ஷ் (வெள்ளை, பச்சை நிற சீருடை). - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் (இபிஎல்) காற்பந்தில் வெஸ்ட் ஹேம் யுனைடெட்டை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது நியூகாசல் யுனைடெட்.

ஆட்டத்தின் ஒரே கோலை நியூகாசலின் புரூனோ கிமாரா‌ஷ் 63வது நிமிடத்தில் போட்டார். இந்த வெற்றியைத் தொடர்ந்து லீக் பட்டியலில் ஆறாம் இடத்துக்கு முன்னேறியது நியூகாசல்.

நியூகாசலும் ஐந்தாம் இடத்தில் உள்ள, லீக்கின் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டியும் ஒரே அளவிலான புள்ளிகளைத்தான் பெற்றிருக்கின்றன; கோல் எண்ணிக்கை வித்தியாசத்தில் மட்டுமே நியூகாசல், சிட்டிக்குப் பின்னால் இருக்கிறது.

அதோடு, மீண்டும் யுயேஃபா சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதிபெறுவதற்கான வாய்ப்பை நியூகாசல் பெற்றுள்ளது. லீக் பட்டியலின் முதல் நான்கு அல்லது ஐந்து இடங்களில் வரும் குழுக்கள் அடுத்த பருவத்தின் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதிபெறும்.

வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) இஎஃப்எல் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் களமிறங்கவுள்ளது நியூகாசல். இறுதியாட்டத்தில், பிரிமியர் லீக் பட்டியலில் முதலிடம் வகிக்கும் லிவர்பூலுடன் மோதவிருக்கிறது நியூகாசல்.

குறிப்புச் சொற்கள்