ஹெர்சோஜெனவுராச்: வலுவான உள்நாட்டு ரசிகர்களின் ஆதரவு இருந்தாலும் வெற்றியை எளிதில் பெறமுடியாது என்று யூரோ 2024 போட்டிகளை ஏற்று நடத்தும் ஜெர்மனி அறிந்திருந்தது.
2014ஆம் ஆண்டு உலகக் கிண்ண வெற்றிக்குப் பிறகு ஒரு பிரதான காற்பந்து விருதைப் பெற களத்தில் இறங்கியுள்ள ஜெர்மனிக்குப் பாடம் கற்றுக்கொடுத்தது சுவிட்சர்லாந்து. இரு குழுக்களுக்கிடையிலான ஏ பிரிவின் கடைசி ஆட்டத்தில் முதலில் கோல் போட்டு அதை கடைசி நிமிடம் வரை சுவிட்சர்லாந்து தக்கவைத்துக் கொண்டிருந்த சமயம், எப்படியாயினும் ஒரு கோல் போட்டு ஆட்டத்தைச் சமநிலைப்படுத்த ஜெர்மனி கடுமையாகப் போராடியது.
அதன் விளைவாக ஆட்டம் முடியும் தருவாயில் ஜெர்மனியின் நிக்கலஸ் ஃபுல்குருக் ஒரு கோல் போட்டு ஆட்டத்தைச் சமப்படுத்தினார். அதன் விளைவாக ஜெர்மனி ஏ பிரிவில் முதல் நிலையைப் பிடித்தது.
அடுத்து 16 குழுக்கள் கொண்ட சுற்றில் ஜூன் 29ஆம் தேதியன்று ஜெர்மனி, டென்மார்க்கைச் சந்திக்கிறது. 1992 யூரோ இறுதியாட்டத்தில் டென்மார்க் 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியைத் தோற்கடித்து, யூரோ கிண்ணத்தைக் கைப்பற்றியதை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
ஆக, அக்குழுவை எளிதில் வென்றுவிடலாம் என்று ஜெர்மனி எண்ணிவிடக்கூடாது என்பதில் அக்குழுவின் பயிற்றுவிப்பாளர் ஜுலியன் நாஜெல்ஸ்மன் மிகவும் கவனமாக இருப்பார்.
டென்மார்க்குக்கு எதிரான ஆட்டத்தில் வழக்கமாக ஆடும் காய் ஹாவெட்சுக்குப் பதிலாக சுவிட்சர்லாந்துக்கு எதிராக கோல் போட்டு ஜெர்மனியைக் காப்பாற்றிய நிக்கலஸ் ஃபுல்குருக்கை களமிறக்க பயிற்றுவிப்பாளர் ஜுலியன் நாஜெல்ஸ்மன் முடிவெடுக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், ஜெர்மனிக்கு எதிராக சிறப்பாக விளையாட தனது குழு தயார்நிலையில் உள்ளது என்று டெர்மார்க்கின் பயிற்றுவிப்பாளர் காஸ்பர் ஹுல்மண்ட் தெரிவித்துள்ளார்.