கோலாலம்பூர்: மலேசியா, 2026 பார்முலா ஒன் பஹ்ரேன் கிராண்ட் பிரீ கார்ப் பந்தயத்தைக் குறைந்த செலவில் நடத்தவுள்ளது. பல மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பதிவுக்கட்டணத்துக்கு பஹ்ரேன் விலக்கு அளித்துள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 2 முதல் 4 வரை நடைபெறவுள்ள எஃப்1 பந்தயத்துக்காக, செப்பாங் அனைத்துலகப் பந்தயத்தளத்தை மேம்படுத்த மலேசிய அரசாங்கம் 10 மில்லியன் முதல் 16 மில்லியன் ரிங்கிட் (S$5.05 மில்லியன்) வரை மட்டுமே செலவிடும்.
மத்திய கிழக்கில் மூண்ட போர் காரணமாக பஹ்ரேனில் எஃப்1 கார்ப் பந்தயம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர், பஹ்ரேன் மன்னர் ஹமத் பின் ஈசா அல் கலீஃபா இடையே நிலவும் நெருங்கிய நட்புறவின் அடிப்படையில், செப்பாங்கில் பந்தயத்தை நடத்த பஹ்ரேன் இணக்கம் தெரிவித்தது.
மலேசியாவில் அமைதி, நிலைத்தன்மை, சிறந்த நிர்வாகம் உள்ளதால் எஃப்1 நிர்வாகம் மலேசியாவைத் தேர்ந்தெடுத்ததாகத் திரு அன்வார் கூறினார். பந்தயத்தைத் திறம்பட நடத்த மலேசியா தயாராக உள்ளது என்றும் அவர் உறுதியளித்தார்.
மலேசியாவில் கடைசியாக 2017ல் எஃப்1 பந்தயம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

