சுஸுக்கா: நான்குமுறை உலக வெற்றியாளரான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ஜப்பானிய கிராண்ட் பிரீ ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக வாகைசூடினார்.
ரெட் புல் குழு சார்பில் பந்தயங்களில் பங்கேற்றுவரும் வெர்ஸ்டாப்பனுக்கு இவ்வாண்டில் இதுவே முதலாவது வெற்றி; ஒட்டுமொத்தமாக 64வது வெற்றி.
ஜப்பானிய ஃபார்முலா ஒன் பந்தயத்தில் நான்குமுறை வென்ற முதல் வீரரும் இவர்தான்.
மெக்லேரன் குழுவின் லாண்டோ நோரிஸ் இரண்டாம் இடத்தையும் ஆஸ்கார் பியாஸ்ட்ரி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். தமது 24வது பிறந்தநாளன்று வெற்றிமேடையை அலங்கரித்தார் பியாஸ்ட்ரி.
தமது வெற்றி நம்ப முடியாத வகையிலான மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறினார் வெர்ஸ்டாப்பன். அவர் எத்தவறும் செய்யாமல் மிகச் சிறப்பாகக் காரோட்டியதாகக் குறிப்பிட்டார் நோரிஸ்.
மழை இல்லாததால் பங்கேற்ற 20 கார்களும் பந்தயத்தை முடித்தது குறிப்பிடத்தக்கது.

