தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஃப்ஏ கிண்ணம்: நம்பிக்கையை மீட்டெடுக்கும் இலக்குடன் ஆர்சனல்

2 mins read
5296eee8-4365-4739-91bf-4fed976bfe4c
கராபாவ் கிண்ணப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் நியூகாசல் யுனைடெட்டிடம் தோல்வியடைந்த பிறகு ஏமாற்றத்துடன் காணப்பட்ட ஆர்சனல் வீரர்கள். - படம்: இபிஏ

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் கடந்த சில வாரங்களாக எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யாத ஆர்சனல், தன்னம்பிக்கையை மீட்டெடுக்கும் நோக்கில் இப்பருவத்தின் எஃப்ஏ கிண்ணப் போட்டியில் களமிறங்கவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 12) எஃப்ஏ கிண்ண நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் யுனைடெட்டுடன் மோதவிருக்கிறது ஆர்சனல். யுனைடெட், இப்பருவம் பிரிமியர் லீக்கில் படுமோசமாக விளையாடியிருக்கிறது. அதேவேளை, சென்ற வாரம் லீக் பட்டியலில் முதலிடம் வகிக்கும் லிவர்பூலை வெல்லவிடாமல் செய்த யுனைடெட் புத்துயிர் பெற்றிருக்கக்கூடும் என்ற உணர்வும் தலைதூக்கியுள்ளது.

லிவர்பூலும் யுனைடெட்டும் மோதிய அந்த ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆர்சனல் சென்ற வாரம் பிரைட்டனுடன் 1-1 என சமநிலை கண்டது.

அதோடு, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) கராபாவ் கிண்ண அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆர்சனல், நியூகாசல் யுனைடெட்டிடம் 2-0 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

சென்ற பருவம் எதிர்பாரா விதமாக எஃப்ஏ கிண்ணத்தை வென்ற யுனைடெட்டை ஆர்சனல் சொந்த மண்ணில் வெல்லத் தவறினால் அது ரசிகர்களுக்கு மேலும் வருத்தத்தைத் தரும். அதேநேரம், இப்பருவத்தின் போட்டியில் மூன்றாம் சுற்றிலேயே நடப்பு வெற்றியாளரை வெளியேற்றினால் அது ஆர்சனலுக்கு உற்சாகம் தரக்கூடும்.

சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்குத் தனது சொந்த மண்ணான எமிரெட்ஸ் விளையாட்டரங்கில் யுனைடெட்டைச் சந்திக்கவுள்ளது ஆர்சனல்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இதர எஃப்ஏ கிண்ண மூன்றாம் சுற்று ஆட்டங்களில் மற்ற சில பிரிமியர் லீக் குழுக்கள், அதற்குக்கீழ் உள்ள லீக்குகளில் போட்டியிடும் குழுக்களுடன் மோதவிருக்கின்றன.

டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர், டேம்வர்த்தைச் (Tamworth) சந்திக்கிறது. கிறிஸ்டல் பேலஸ், ஸ்டாக்போர்ட் கவுன்டியுடன் மோதுகிறது. இப்சுவிச் டவுன் பிரிஸ்டல் ரோவர்சுடனும் நியூகாசல் யுனைடெட் பிராம்லியுடனும் (Bromley) மோதுகின்றன. பிரிமியர் லீக்கில் பெரிதும் சிரமப்பட்டுவரும் சவுத்ஹேம்ப்டன், சுவான்சி சிட்டியுடன் மோதவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இதற்கிடையே, உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) இரவு நடைபெற்ற எஃப்ஏ கிண்ண மூன்றாம் சுற்று ஆட்டமொன்றில் ஆஸ்டன் வில்லா, வெஸ்ட் ஹேம் யுனைடெட்டை 2-1 எனும் கோல் கணக்கில் வென்று நான்காம் சுற்றுக்கு முன்னேறியது. இரு குழுக்களும் பிரிமியர் லீக் குழுக்களாகும்.

குறிப்புச் சொற்கள்