தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சதமடிப்பதை தடுக்க அகலப்பந்து வீசிய வீரரை சாடும் இணையவாசிகள்

2 mins read
2b304e1f-32c2-4e6f-9249-cf66bdd28233
படம்: டுவிட்டர் -

ஐபிஎல் என்னும் இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.

பட்டியலில் முதல் நான்கு இடங்களில் முடிக்க அணிகள் இடையே கடும் போட்டி நடந்து வருகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை (மே 11) இரவு நடந்த ஆட்டத்தில் கோல்கத்தா அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின.

ஆட்டம் கோல்கத்தாவின் ஈடன் கார்டன் விளையாட்டரங்கில் நடந்தது.

முதலில் பந்தடித்த கோல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் எடுத்தது.

இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு ய‌ஷ்யஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி ஓட்டங்கள் குவித்தார்.

13 பந்தில் அரைசதம் அடித்த அவர், வேகமாக ஆடி சதம் அடிக்கவும் முயன்றார்.

13ஆவது ஓவரை சுயா‌ஷ் சர்மா வீசினார், அப்போது ஜெய்ஸ்வாலுக்கு சதத்தை அடிக்க 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது. வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

முதல் 5 பந்துகளில் 7 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன. வெற்றிக்கு தேவை 3 ஓட்டங்களாக மாறியது.

இந்நிலையில் சுயா‌ஷ் சர்மா ஓவரின் கடைசி பந்தை வேண்டுமென்றே அகலப் பந்தாக வீச முயன்றார். இருப்பினும் சுதாரித்துக்கொண்ட பந்தடிப்பாளர் சஞ்சு சாம்சன் அதைத் தடுத்தார்.

பிறகு ஜெய்ஸ்வாலை நோக்கி சிக்சர் அடிக்குமாறு சாம்சன் சைகை காட்டினார்.

94 ஓட்டங்களில் இருந்த ஜெய்ஸ்வாலால் 4 ஓட்டம் மட்டுமே எடுக்க முடிந்தது, அதனால் அவர் 98 ஓட்டங்களை மட்டுமே எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

சுயா‌ஷ் சர்மா அகலப்பந்து வீச எண்ணியது குறித்து இணையவாசிகள் கடுமையாக சாடி வருகின்றனர். நேர்மையாக விளையாட வேண்டும், போட்டியில் இதுபோன்ற சூழ்ச்சிகள் செய்யக் கூடாது என்று குறைகூறினர்.

வெற்றி இலக்கை ராஜஸ்தான் 13.1 ஓவரில் எட்டி, புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.

குறிப்புச் சொற்கள்