டெஸ்ட் போட்டியைப் பொறுத்த வரையில் கம்பீருக்கு அழுத்தம்தான்: பவுமா

டெஸ்ட் போட்டியைப் பொறுத்த வரையில் கம்பீருக்கு அழுத்தம்தான்: பவுமா

2 mins read
e219ce5e-3294-4485-8cb8-7a6d11b0692f
இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கவுதம் கம்பீர் (இடது), தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா. - படங்கள்: மாலைமலர்

மும்பை: தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி அண்மையில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரைத் தென்ஆப்பிரிக்கா 2-0 எனக் கைப்பற்றியது. ஆனால், ஒருநாள் தொடரை 2-1 எனவும், டி20 தொடரை 3-1 எனவும் இந்தியா கைப்பற்றியது.

இந்த நிலையில், “இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கவுதம் கம்பீருக்கு ஒருநாள் கிரிக்கெட் சமாளிக்கக் கூடியதுதான். ஆனால், டெஸ்ட் தொடர் என்று வந்தால் அவருக்கு அழுத்தம்தான்,” என தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.

“விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இரண்டு நட்சத்திர வீரர்களுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி எப்படி விளையாடியது என்று நீங்கள் பார்த்தீர்கள். அதுவேளையில் டெஸ்ட் போட்டியில் அவர்கள் இல்லை. டெஸ்ட் போட்டி என்று வரும்போது, இந்தியா மாற்றத்தின் பாதையில் இருக்கும் அணிதான்,” என்று பவுமா கூறினார்.

“இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கவுதம் கம்பீர் தனது தோளில் ஏராளமான அழுத்தத்தை கொண்டுள்ளார். அவர் அந்த அழுத்தத்தைச் சமாளித்து செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். என்னுடைய பார்வையில் ஒயிட் பால் கிரிக்கெட் ஆட்டத் திறன் அவருக்கு உதவியாக இருக்கலாம்.

“ஒருநாள் போட்டியில் ஆட்டத்திறன் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றில் வழக்கமாக விராட் கோலியும் ரோகித் சர்மாவும் பொறுப்புகளை எடுத்துக் கொள்வார்கள். ஆகவே, கவுதம் கம்பீர் அவருடைய நிலையில் சமாளிக்க முடியும் என நான் நினைக்கிறேன். எனினும், டெஸ்ட் கிரிக்கெட் பார்வையில், எதிர்காலத்தில் இந்தியாவுக்குக் கடினமாக இருக்கப் போகிறது,” என்று பவுமா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்