லண்டன்: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 பலநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை, 5வது ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.
அவ்வகையில் புதன்கிழமை (ஜூலை 2) 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
மழை காரணமாக போட்டி 40 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இப்போட்டியில் முதலில் பந்தடித்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டங்கள் குவித்தது.
இதனையடுத்து 269 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியால் 34.3 ஓவர்களில் 274 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 31 பந்துகளில் 86 ஓட்டங்கள் அடித்து வெளியேறினார்.
இதன்மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 -1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 20 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில் குறைந்த பந்துகளில் (20) அரைசதம் விளாசிய 2வது இந்தியர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
இதற்கு முன் 2016ல் நேப்பாளத்திற்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் 18 பந்துகளில் அரை சதம் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்போட்டியில் 9 சிக்ஸர்களை வைபவ் சூர்யவன்ஷி அடித்தார். இதன்மூலம் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.