குவாலியர்: அனைத்துலக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் ஆட்டக்காரர் என்ற மாபெரும் சாதனைக்குச் சொந்தக்காரர், கிரிக்கெட் உலகில் ரத்தினமாக மின்னிய இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர்.
2010ஆம் ஆண்டின் இதே நாளில், அதாவது பிப்ரவரி 24ஆம் தேதி குவாலியரில் உள்ள கேப்டன் ரூப் சிங் விளையாட்டரங்கில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில்தான் சச்சின் அச்சாதனையை நிகழ்த்திக் காட்டினார்.
அப்போட்டியின் 50வது ஓவரின் 3வது பந்தில் அந்த மைல்கல்லை எட்டிய சச்சின், 200 ஓட்டங்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதற்காக அவர் 147 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார்.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 200 ஓட்டங்களில் 25 பவுண்டரிகளும் மூன்று சிக்சர்களும் அடங்கும்.
அச்சாதனையை அவர் நிகழ்த்திக்காட்டியதும், வர்ணனையாளராக இருந்த ரவி சாஸ்திரி, "இந்த பூமியில் 200 ஓட்டங்களைத் தொட்ட முதல் ஆள், இந்தியாவின் சூப்பர்மேன் சச்சின் டெண்டுல்கர். தலைவணங்குகிறேன் ஆசானே!" என்று புகழாரம் சூட்டினார்.
அப்போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 401 ஓட்டங்களை எடுத்தது. இமாலய இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணி 248 ஓட்டங்களை மட்டும் எடுத்துத் தோற்றது.
தமது இந்த மகத்தான சாதனையை இந்திய மக்களுக்கு அர்ப்பணிப்பதாகக் குறிப்பிட்டார் சச்சின்.
"கடந்த 20 ஆண்டுகளாக எனக்குப் பேராதரவு அளித்துவரும் இந்திய மக்களுக்கு இந்த இரட்டை சதத்தை அர்ப்பணிக்கிறேன். எத்தனை ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதும், அவர்கள் எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர்," என்று சாதனை நாயகன் சச்சின் அப்போது கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஆடவருக்கான அனைத்துலக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை பத்து முறை இரட்டை சதம் அடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஏழுக்கு இந்திய வீரர்களே சொந்தக்காரர்கள்.


