அபுதாபி: இந்தப் பருவத்தின் ஃபார்முலா ஒன் கார் பந்தயம் (எஃப்1) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
பருவத்தின் கடைசி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு அபுதாபியில் நடக்கிறது.
இப்பருவத்தின் ஓட்டுநர் கிண்ணத்தை ‘ரெட் புல்’ அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ஏற்கெனவே வென்றுள்ளார். அவர் இதுவரை 429 புள்ளிகளை பெற்றார். அதனால் இப்பந்தயத்தின் முடிவு அவரை பாதிக்காது.
இரண்டாவது இடத்தில் 349 புள்ளிகளுடன் மெக்லேரன் குழுவின் லேண்டோ நோரிஸ் உள்ளார். மூன்றாவது இடத்தில் 341 புள்ளிகளுடன் ஃபெராரியின் சார்ல்ஸ் லெக்லெர்க் உள்ளார்.
அணிகளுக்கான கிண்ணத்தை வெல்ல மெக்லேரன், ஃபெராரி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மெக்லேரன் அணி 640 புள்ளிகளுடன் உள்ளது. அதே நேரம் ஃபெராரி 619 புள்ளிகள் பெற்றுள்ளது. அதனால் அபுதாபி பந்தயத்தில் முதல் மூன்று இடங்களில் முடிக்க மெக்லேரன், ஃபெராரி ஓட்டுநர்கள் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 14 ஆண்டுகளாக அணிகளுக்கான கிண்ணத்தை ரெட் புல், மெர்சிடிஸ் அணிகள் மட்டுமே வென்றுள்ளன.
விடைபெறும் ஹாமில்டன்
ஏழு முறை ஓட்டுநருக்கான எஃப்1 கிண்ணத்தை வென்ற லூயிஸ் ஹாமில்டன், மெர்சிடிஸ் அணியைவிட்டு அபுதாபி பந்தயத்துடன் விலகுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
மெர்சிடிஸ் அணியின் அடையாளமாக இருந்த ஹாமில்டன் அடுத்த பருவத்தில் ஃபெராரி குழுவுக்காக களமிறங்குகிறார். 2013ஆம் ஆண்டு மெர்சிடிஸ் அணியில் சேர்ந்தார் ஹாமில்டன்.
இப்பருவத்தில் ஹாமில்டனால் போதிய அளவில் வெற்றிகளை குவிக்க முடியவில்லை. மேலும் மெர்சிடிஸ் அணி காரில் பல பிரச்சினைகள் இருப்பதாக குறைகூறப்பட்டது.