உறுப்புச் சங்கங்களிடம் மன்னிப்புக் கேட்டது ஃபிஃபா

உறுப்புச் சங்கங்களிடம் மன்னிப்புக் கேட்டது ஃபிஃபா

1 mins read
fcb6a15a-e234-4081-92d1-7de33cd6815a
ரபாட்டில் நடைபெற்ற மகளிர் ஆப்பிரிக்கக் கிண்ணப் போட்டியில் மலாவி - ஸாம்பியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்குப் பிறகு அல்-மதினா விளையாட்டரங்கிலிருந்து புறப்படும் ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ (நடுவில்). - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ரபாட்: மொரோக்கோவின் ரபாட் நகரில் நடந்த நெருக்கடிநிலைக் கூட்டத்திற்குப் பிறகு, அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (ஃபிஃபா) தனது 211 உறுப்புச் சங்கங்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டி தொடர்பான வணிக உரிமைகளை விற்க முன்வைக்கப்பட்ட திட்டம் கைவிடப்பட்டதை அடுத்து, ஃபிஃபா புதன்கிழமை (ஆகஸ்ட் 5) மன்னிப்புக் கோரியது. ஒரு புதிய வணிக உரிமை அமைப்பில் 20 விழுக்காட்டுப் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களிடம் விற்பனை செய்து, ஏறக்குறைய US$4.2 பில்லியன் (S$5.4 பில்லியன்) திரட்டுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, ஜூலை 31ஆம் தேதி அது திரும்பப் பெறப்பட்டது. இதனால் ஃபிஃபா தலைவர் ஜியானி இன்பான்டினோ கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள தலைவருக்கான தேர்தலில் அவரது மறுதேர்வு குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. இருப்பினும், நெருக்கடிநிலைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள், இன்ஃபான்டினோவுக்குத் தங்களின் முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

தலைமைச் செயலாளர் மத்தாயஸ் கிராஃப்ஸ்ட்ரோம் ஃபிஃபா ஊழியர்களுக்கு எழுதிய குறிப்பில், இத்திட்டம் நிரந்தரமாகக் கைவிடப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும், தவறுதலாக நடந்த இச்சம்பவங்களுக்காக உறுப்புச் சங்கங்களுக்குத் தனியாகக் கடிதம் அனுப்பி மன்னிப்புக் கேட்கப்பட்டுள்ளதாகவும் ஃபிஃபா தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
காற்பந்துமன்னிப்புவிற்பனை