உலகக் கிண்ணப் போட்டி உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் தனியார் முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் திட்டத்தை ஃபிஃபா எனும் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் கைவிட்டுள்ளது.
அந்தத் தகவலை அதன் தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ வெள்ளிக்கிழமை (ஜூலை 31) வெளியிட்டார். “அனைத்துத் தரப்புகளின் கருத்துகளையும் கவனமாகக் கேட்டறிந்த பிறகு, இந்தத் திட்டம் எத்தகைய ஆதரவைப் பெற்றிருந்தாலும் முதலில் நிர்ணயிக்கப்பட்ட நோக்கத்திற்கு இனி எந்த வகையிலும் பலனளிக்காத வகையிலான பிளவுகளை உருவாக்கியுள்ளது என்பது தெளிவாகியுள்ளது,” என்று இன்ஃபன்டினோ கூறினார்.
பிரிட்டனின் ஸ்கை நியூஸ் ஊடகத்திடம் அந்தக் கருத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.
இன்ஃபன்டினோவின் மூத்த ஆலோசகர் ஒருவர் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பதவி விலகினார். பின்னர் வெள்ளிக்கிழமை ஃபிஃபாவின் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்தது. அத்துடன், இந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு புதிய பிரிவில் சுமார் 20 விழுக்காட்டுப் பங்கை விற்பதன் மூலம் 4.2 பில்லியன் அமெரிக்க டாலர் வரை நிதி திரட்ட ஃபிஃபா திட்டமிட்டிருந்தது. இருப்பினும், உலகெங்கிலும் உள்ள காற்பந்து அதிகாரிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
முன்னதாக வெள்ளிக்கிழமை, இன்ஃபாடினோவின் மூத்த ஆலோசகர் கார்லோஸ் கோர்டிரோ, இந்தத் திட்டத்தைக் “காற்பந்துக்கு எதிரான மோசமான ஓர் ஒப்பந்தம்,” என்று விமர்சித்து உடனடியாகப் பதவி விலகினார்.

