நியூயார்க்: 2030ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னதாக, மேலும் 16 அணிகளைச் சேர்த்து போட்டியை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் (ஃபிஃபா) அதிகாரிகள் பரிசீலிப்பார்கள் என்று அதன் தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
48 அணிகளிலிருந்து 64 அணிகளாக அதிகரிப்பது ஒரு சரியான முடிவாக இருக்கலாம் என்று சுவிஸ் ஊடகமான ப்ளூவினிடம் இன்ஃபன்டினோ கூறினார்.
“இந்த உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட குழுக்களிடம் இந்த விவகாரம் குறித்து நிச்சயமாக ஆராயப்பட்டு விவாதிக்கப்படும்,” என்று அவர் ப்ளூவினிடம் கூறினார்.
“ஒரு உலகக் கிண்ணப் போட்டியை ஏற்பாடு செய்யும்போது, அதை ஐரோப்பா. தென் அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல், முழு உலகிற்கும் ஏற்பாடு செய்வது முக்கியம்.
“ஒவ்வொரு நாடும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பங்கேற்பதற்கு கனவு காண அனுமதிக்கப்பட வேண்டும். அணிகளின் தரம் மிக உயர்வாக இருப்பதை நீங்கள் காணலாம். அத்துடன் அது உலகம் முழுவதும் மேன்மேலும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
“சிறிய நாடுகளுக்கு உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்காவிட்டால், தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வதற்கான ஊக்கம் அவர்களுக்கு இல்லாமல் போய்விடும்,” என்று அவர் விவரித்தார்.
1998ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் 32 அணிகள் பங்கேற்றன. தற்போதைய 2026 உலகக் கிண்ண இறுதிச் சுற்று, 48 அணிகளுடன் நடைபெறும் முதல் பதிப்பாகும்.
அர்ஜென்டினா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நான்கு அணிகள் இப்போட்டித் தொடரில் எஞ்சியுள்ளன. கனடா, மெக்சிகோ, அமெரிக்கா முழுவதும் நடைபெற்ற 104 போட்டிகள் கொண்ட அட்டவணையில், இரண்டு அரையிறுதிப் போட்டிகள், மூன்றாவது இடத்திற்கான போட்டி, இறுதிப் போட்டி ஆகியவை மட்டுமே எஞ்சியுள்ளன.
“ஒவ்வோர் அணியும் உயர் மட்டத்தில் விளையாடியது. ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் வந்த அணிகள் கோல்களை அடித்து, குறைந்தபட்சம் ஒரு புள்ளியையாவது பெற்றன.
“2030ஆம் ஆண்டு நடைபெற உள்ள போட்டியானது பல கண்டங்கள் பங்கேற்கும் ஒரு மாபெரும் முயற்சியாக இருக்கும்,” என்றும் ஃபிஃபா தலைவர் தெரிவித்தார்.

