வாஷிங்டன்: உலகக் கிண்ணக் காற்பந்து 2026ல், ஒவ்வொரு குழுவும் எந்தெந்த அணிகளுடன் மோதப்போகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளும் நேரம் நெருங்கிவிட்டது. அதன் தொடர்பிலான குலுக்கல் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) வாஷிங்டனில் நடைபெறவிருக்கிறது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் முன்னிலையில் குலுக்கல் இடம்பெறவுள்ளது.
உலகக் கிண்ணப் போட்டிகள் அடுத்த ஆண்டு (2026) ஜூன் மாதம் 11ஆம் தேதியிலிருந்து ஜூலை 19 வரை வட அமெரிக்காவில் நடைபெறவுள்ளன.
போட்டிகளில் முதன்முறையாக இந்தத் தடவை 48 குழுக்கள் பங்கெடுக்கின்றன.
இதற்கு முன்னர் 2022ல் கத்தாரில் நடைபெற்ற போட்டிகளில் 32 நாடுகள் கலந்துகொண்டன. இம்முறை கூடுதலாக 16 குழுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பொட்டோமேக் ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள கென்னடி நிலையத்தில் போட்டி அட்டவணை குறித்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் (ஃபிஃபா) தலைவர் ஜியானி இன்ஃபன்ட்டினோ, போட்டிகள் குறித்துத் திரு டிரம்ப்புடன் விவாதிக்க வெள்ளை மாளிகைக்குச் சில முறை சென்றுவந்தார்.
ஃபிஃபா அமைதி விருது வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவிருக்கிறது. அது திரு டிரம்ப்புக்கு வழங்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களை ஒன்றிணைத்து, எதிர்காலத் தலைமுறையினருக்கு நம்பிக்கையைக் கொண்டுவரும் தனிமனிதர்களின் அளப்பரிய முயற்சிகளை அங்கீகரிக்கும் நோக்கத்தில் விருது கொடுக்கப்படுவதாகத் திரு இன்ஃபன்ட்டினோ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
‘போட்டி அட்டவணை நிகழ்ச்சி’ நடைபெறும் இடத்திற்கு ஒப்புதல் தந்ததும் அமெரிக்க அதிபர்தான். கென்னடி நிலையத்தின் தலைவராக இவ்வாண்டுத் தொடக்கத்தில் தம்மைத் தாமே நியமித்துக்கொண்டார் திரு டிரம்ப். நிகழ்த்துகலை அரங்கமான அது 1970களில் திறக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கனடியப் பிரதமர் மார்க் கார்னியும் மெக்சிகோவின் அதிபர் கிளவ்டியா ஷேன்பாமும் கலந்துகொள்வர் என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களுடன் கலையுலக நட்சத்திரங்கள் பலரும் அதில் பங்கெடுக்கவுள்ளனர்.
உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறும் இடங்களில் 16, அமெரிக்காவிலும் மூன்று, மெக்சிகோவிலும் இரண்டு, கனடாவிலும் உள்ளன.
போட்டியிடும் நாடுகள், 12 பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் நான்கு குழுக்கள் இருக்கும். அந்தப் பிரிவுகளில் முதல் இரண்டு நிலைகளில் வரும் குழுக்கள், அடுத்த சுற்றுக்கு முன்னேறும். மூன்றாம் நிலையில் வரும் ஆகச் சிறந்த எட்டுக் குழுக்கள் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும். ஆக, அந்தச் சுற்றில் மொத்தம் 32 குழுக்கள் போட்டியிடும்.
நடப்பு வெற்றியாளரான அர்ஜென்ட்டினா, ஐந்து முறை கிண்ணத்தை வென்ற பிரேசில், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, போர்ச்சுகல், நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகியவை முதல் நிலையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுடன் போட்டிகளை ஏற்று நடத்தும் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவும் சேர்க்கப்பட்டுள்ளன.
போட்டிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், இந்தத் தடவை முதன்முறையாகச் சில குழுக்கள் பங்கெடுக்கின்றன. கேப் வெர்ட், ஜோர்தான், கியூரசாவ் முதலியவை அவற்றுள் சில.
உலகக் கிண்ணப் போட்டிகளின் முதல் ஆட்டம், மெக்சிகோ நகரத்தின் அஸ்டெக்கா விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி, நியூ யார்க் நகருக்கு வெளியே இருக்கும் மெட்லைஃப் அரங்கத்தில் இடம்பெறவிருக்கிறது.
அதிகமான குழுக்கள் இருப்பதால், எங்கு, எத்தனை மணிக்குப் போட்டிகள் தொடங்குகின்றன உள்ளிட்ட விவரங்களை, அணிகள் சனிக்கிழமைதான் (டிசம்பர் 6) தெரிந்துகொள்ள முடியும்.

