ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நான்கு ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை இந்திய அணி 2-1 என முன்னிலை வகித்த நிலையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) இரவு நான்காவது டி20 ஆட்டம் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் விளையாட்டு அரங்கில் நடந்தது.
பூவா தலையாவில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் பந்தடித்தது. ஆட்டம் தொடங்கியதிலிருந்து அதிரடி காட்டினர் இந்திய வீரர்கள்.
அபிஷேக் சர்மா 18 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்தார். அதன்பின்னர் களமிறங்கிய திலக் வர்மா, சஞ்சு சாம்சனுடன் இணைந்து வாண வேடிக்கை காட்டினார்.
சாம்சன் 56 பந்தில் 109 ஓட்டங்கள் எடுத்தார். அவர் 9 சிக்சர்கள் அடித்தார். மறுபக்கம் திலக் வர்மா 47 பந்தில் 120 ஓட்டங்கள் குவித்தார். திலக் வர்மா 10 சிக்சர்களும் 9 பவுண்டரிகளும் விளாசினார்.
இரு வீரர்களும் இத்தொடரில் 2 சதங்கள் அடித்து அசத்தினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 283 ஓட்டங்கள் எடுத்தது.
பெரிய இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்காவுக்கு தொடக்கமே தடுமாற்றமாக இருந்தது. 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தென்னாப்பிரிக்கா 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை திலக் வர்மா தட்டிச் சென்றார்.
தொடர்புடைய செய்திகள்
இளம் வீரர்களை கொண்டு இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட சில முக்கிய வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பினால் இந்திய அணி டி20 போட்டிகளில் வீழ்த்த முடியாத அணியாக மாறும் என்று கிரிக்கெட் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.