தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்துலக கிரிக்கெட்டில் இவ்வகையில் ஆட்டமிழந்த முதல் ஆட்டக்காரர்!

1 mins read
பங்ளாதேஷ் - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியில் சர்ச்சை
56e0fef0-134f-4746-bc04-b2bf41d6fb41
தலைக்கவசப் பட்டை உடைந்ததால் ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளாமல் வந்த வேகத்தில் வெளியேறிய இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

புதுடெல்லி: அனைத்துலக கிரிக்கெட் போட்டிகளில் நேரம் கடந்ததால் (Timed out) ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்ட முதல் ஆட்டக்காரர் என்ற வேண்டாப் பெருமையைப் பெற்றார் இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ்.

புதுடெல்லியில் திங்கட்கிழமை பங்ளாதேஷ்-இலங்கை அணிகள் மோதிய உலகக் கிண்ணப் போட்டி இடம்பெற்று வருகிறது.

இதில் இலங்கை அணி முதலில் பந்தடித்தது. 41 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இலங்கை அணியின் நான்காவது வீரராக ஆட்டமிழந்தார் சதீர் சமரவிக்ரம.

அதனைத் தொடர்ந்து, திடலுக்குள் நுழைந்தார் மேத்யூஸ். ஆனால், ஆடுகளத்தை வந்தடைந்ததும் எதிர்பாராதவிதமாக அவரது தலைக்கவசத்தின் இணைப்புப் பட்டை உடைந்துவிட்டது. இதனையடுத்து, வேறு தலைக்கவசம் கொண்டுவரப்படுவதற்காக அவர் காத்திருந்தார்.

ஆனால், காலங்கடந்துவிட்டதால் மேத்யூஸ் ஆட்டமிழந்ததாக அறிவிக்க வேண்டும் என பங்ளாதேஷ் அணித்தலைவர் ஷாகிப் அல் ஹசன் முறையிட்டார். அதனை ஏற்றுக்கொண்டு, நடுவரும் மேத்யூஸ் ஆட்டமிழந்ததாக அறிவித்தார்.

ஒருவர் ஆட்டமிழந்தபின் அடுத்த ஆட்டக்காரர் மூன்று நிமிடங்களுக்குள் பந்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று மேரில்போர்ன் கிரிக்கெட் மன்ற (எம்சிசி) விதிநூல் கூறுகிறது.

ஆயினும், 2023 உலகக் கிண்ண ஒருநாள் தொடரில் அந்தக் கால அவகாசம் இரண்டு நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இரண்டு நிமிடங்களுக்குள் பந்தை எதிர்கொள்ளத் தயாராகாததால், மேத்யூஸ் ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ள அனுமதிக்கப்படாமல் வெளியே அனுப்பப்பட்டார்.

முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் இதற்குமுன் இவ்வகையில் அறுவர் ஆட்டமிழந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்