முடிவை நோக்கி முதல் டெஸ்ட்

1 mins read
39db51a3-4936-4ebd-901a-fc905f139611
இரண்டாவது இன்னிங்சில் தென்னாப்பிரிக்க வீரர்கள் நால்வரை ஆட்டமிழக்கச் செய்த ரவீந்திர ஜடேஜாவைப் (இடது) பாராட்டும் சக இந்திய வீரர்கள். - படம்: ஏஎஃப்பி

கோல்கத்தா: இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மூன்றாவது நாளிலேயே முடிவுக்கு வருவது உறுதியாகியுள்ளது.

இந்தியா சென்றுள்ள தென்னாப்பிரிக்க அணி முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.

கோல்கத்தாவில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்தடித்தது.

முதல் நாளிலேயே அவ்வணி தனது முதல் இன்னிங்சில் 159 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இந்நிலையில், போட்டியின் இரண்டாம் நாளிலும் ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாகவே இருந்தது. இதனால், இந்திய ஆட்டக்காரர்களும் ஓட்டம் சேர்க்க பெரிதும் தடுமாறினர்.

இறுதியில், இந்திய அணி 189 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் 39 ஓட்டங்களையும் வாஷிங்டன் சுந்தர் 29 ஓட்டங்களையும் எடுத்தனர். தென்னாப்பிரிக்க அணித் தரப்பில் சைமன் ஹார்மர் நான்கு விக்கெட்டுகளையும் மார்க்கோ யான்சன் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன்பின் தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி இரண்டாம் நாள் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 93 ஓட்டங்களை எடுத்து, 63 ஓட்டங்கள் முன்னிலையுடன் இருக்கிறது.

இரண்டாவது போட்டி நவம்பர் 22ஆம் தேதி கௌகாத்தியில் தொடங்கவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்