வி.கே.சந்தோஷ் குமார்
இவ்வாண்டு நடைபெற்ற ஃபிஃபா உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரில் ரசிகர்களின் கவனம் ஆட்டத்தின்மீதே இருந்தது.
ஆனால், அப்படிப்பட்ட பெரிய மேடையில் நடுவர்கள் சிறப்பாகச் செயல்படத் தயாராக இருப்பதை உறுதிசெய்வதில் சிங்கப்பூரர் ஒருவர் பின்னணியில் முக்கியப் பங்காற்றி வந்தார்.
62 வயதான திரு கணேசன் மணியம், ஏழு ஃபிஃபா உடலுறுதிப் பயிற்றுவிப்பாளர்களில் ஒரே ஆசியராக பணியாற்றினார்.
50 நாள் போட்டித் தொடரின்போது அமெரிக்காவின் மயாமியில் தங்கியிருந்த அவர், 170 பேர் கொண்ட நடுவர் குழுவைத் தயார்ப்படுத்த உதவினார்.
அதில் 52 நடுவர்கள், 88 உதவி நடுவர்கள், 30 காணொளி நடுவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
2018ல் ரஷ்யா, 2022ல் கத்தார் ஆகிய உலகக் கிண்ணத் தொடர்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாகத் தொடர்ச்சியாக உலகக் கிண்ணத்தில் பணியாற்றியுள்ளார் திரு கணேசன்.
தொடர்ந்து மூன்று உலகக் கிண்ணங்களில் பணியாற்றிய தென்கிழக்காசியாவின் முதல் உடலுறுதிப் பயிற்றுவிப்பாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
“போட்டிகளை நேரில் பார்ப்பது தொலைக்காட்சியில் பார்ப்பதைவிட முற்றிலும் மாறுபட்ட அனுபவம். அரங்கில் மின்சாரம் பாய்வதைப் போன்ற பரபரப்பு நிலவியது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில்கூட 10 கோல்கள் பதிவாகின. அது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது,” என்று திரு கணேசன் நினைவுகூர்ந்தார்.
அன்றாடம் காலை, திரு கணேசனும் அவருடன் பணியாற்றிய பயிற்றுவிப்பாளர்களும் மயாமி டேட் கல்லூரியில் 90 நிமிடங்களுக்கு தீவிர களப் பயிற்சிகளை நடத்தினர்.
நடுவர்கள் அதிகக் களைப்புக்கு ஆளாகாமல் இருப்பதற்காகப் பயிற்சித் திட்டங்களை மிகவும் கவனமாக உருவாக்கினார்.
பிற்பகல் நேரத்தில் விரிவான கலந்துரையாடல் அமர்வுகள் நடைபெற்றன. இதில் அடுத்த போட்டிகளில் பயன்படுத்தக்கூடிய அனுபவப் பாடங்களும் பகிரப்பட்டன.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளிலும் போட்டிகள் நடைபெற்றதால், நடுவர்கள் தொடர்ந்து வெவ்வேறு நகரங்களுக்கு பயணம் செய்ய வேண்டியிருந்தது.
இதனால், அவர்களின் ஊட்டச்சத்து, ஓய்வு, பயணத் திட்டமிடல் ஆகியவற்றையும் முறையாகக் கவனிப்பது உடலுறுதிப் பயிற்றுநர்களின் அன்றாடப் பணியில் முக்கிய இடம்பெற்று இருந்தன.
“முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான நடுவர்கள் இருந்ததால், ஒவ்வொருவரின் உடற்தகுதியையும் கவனிப்பது நிச்சயமாக சவாலானதாக இருந்தது. இருப்பினும், எங்களது இலக்கை அடைந்தோம். ஒவ்வொரு போட்டிக்கும் பொருத்தமான நடுவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் செயல்பாடுகளும் எங்களுக்கு திருப்தியளித்தன,” என்றார் திரு கணேசன்.
உடலுறுதிப் பயிற்றுநராகப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக, திரு கணேசன் 20 ஆண்டுகளாக நடுவராக பணியாற்றியிருந்தார்.
ஃபிஃபா உதவி நடுவராகவும் ஃபிஃபா நடுவராகவும் பணியாற்றிய அவர், காயங்கள் காரணமாக அந்தப் பாதையைத் தொடர முடியாமல் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார்.
சிங்கப்பூர் ஆயுதப் படையில் உடலுறுதிப் பயிற்றுநராகப் பணியாற்றிய அனுபவம், சிறு வயதிலிருந்தே விளையாட்டு வீரராக அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் அனைத்தும் உடல்தகுதிப் பயிற்றுநராக அவர் ஆற்றிய பொறுப்புக்கு வலுவான அடித்தளமாக அமைந்தன.
“கவனம் முழுவதும் வீரர்கள் மீதும் போட்டிகள் மீதும் இருக்கும் நிலையில், பின்னணியில் இருந்து பங்களித்து உலகின் சிறந்த நடுவர்கள் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்த உதவியதில் நான் பெருமை கொள்கிறேன்,” என்றார் திரு கணேசன்.


