தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெதர்லாந்து அணிக்குப் பந்துவீசும் தமிழர்!

2 mins read
0b0f1e6d-e9a7-4fc1-a7dd-2568947fd10b
நெதர்லாந்து அணியின் வலைப்பயிற்சிக்குக் கைகொடுக்கும் லோகேஷ் குமார், 29. - படங்கள்: ஊடகம், ஏஎஃப்பி

சென்னை: இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 19ஆம் தேதிவரை உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

அப்போட்டித் தொடரில் பங்குகொள்ளும் பத்து அணிகளுள் நெதர்லாந்தும் ஒன்று.

ஏற்கெனவே இந்தியா சென்றுவிட்ட அவ்வணி, உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு ஆயத்தமாகும் பொருட்டு 21ஆம் தேதி வியாழக்கிழமையிலிருந்து கர்நாடக மாநிலத்தின் அலூரில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

வலைப்பயிற்சியின்போது தங்களுக்கு உதவ இந்தியப் பந்துவீச்சாளர்கள் தேவை என்று அது ஏற்கெனவே சமூக ஊடகங்கள் வழியாக விளம்பரம் செய்திருந்தது. அதற்குப் பெருவரவேற்பு கிடைத்தது என்றும் கிட்டத்தட்ட 10,000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், வலைப்பயிற்சியின்போது தங்களுக்குப் பந்துவீச இருக்கும் உள்ளூர்வாசிகள் நால்வர் யார் யார் என்பதை நெதர்லாந்து அணி அறிவித்துள்ளது.

அந்நால்வரில் சென்னையைச் சேர்ந்த உணவு விநியோக ஊழியர் 29 வயது லோகேஷ் குமாரும் ஒருவர்.

‘மிஸ்டரி ஸ்பின்னர்’ என்ற கணிக்க முடியாத சுழற்பந்து வீச்சாளரான லோகேஷ், ‘ஸ்விக்கி’ நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார்.

வேகப் பந்துவீச்சாளராகத் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய லோகேஷ், பின்னர் சுழற்பந்துவீச்சுக்கு மாறினார்.

“என் வாழ்க்கையின் மதிப்புமிக்க தருணம் இது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஐந்தாம் நிலைப் போட்டிகளில் நான்கு ஆண்டுகாலம் விளையாடியுள்ளேன். வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராகத் தேர்வுபெற்றிருப்பதன்மூலம் எனது திறமைக்குச் சான்றளித்திருப்பதாக நினைக்கிறேன்,” என்று லோகேஷ் கூறினார்.

“நெதர்லாந்து அணியினர் இருகரம் நீட்டி என்னை வரவேற்றனர். பயிற்சிக்குமுன் அறிமுக நிகழ்ச்சி இடம்பெற்றது. அப்போது, ‘இது உங்கள் அணிபோல நினைத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினர். இப்போதே நெதர்லாந்துக் குடும்பத்தில் நானும் ஒருவன்போல் உணர்கிறேன்,” என்றார் அவர்.

இந்திய பிரிமிய லீக் (ஐபிஎல்) போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது லோகேஷின் கனவு.

குறிப்புச் சொற்கள்