உருகுவே காற்பந்து வீரர்களுக்குத் தடை

உருகுவே காற்பந்து வீரர்களுக்குத் தடை

1 mins read
6ee5bc5e-2190-4598-aeb1-4864f7aa6913
ஆட்ட முடிவில் உருகுவே வீரர்கள் சிலர் நடுவரைச் சூழ்ந்துகொண்டு அவரிடம் ஆவேசமாக வாக்குவாதம் செய்தனர். படம்: ராய்ட்டர்ஸ் -

உருகுவே காற்பந்து அணியின் நான்கு வீரர்களுக்கு அனைத்துலக காற்பந்து சம்மேளனமான ஃபிஃபா தற்காலிகத் தடை விதித்துள்ளது.

கடந்த டிசம்பரில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தின்போது கானாவுடன் மோதிய உருகுவே 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

மூன்று கோல்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தால், உருகுவே அணிக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பிருந்தது. ஆனால், இன்னொரு கோல் போட கடைசிவரை போராடிய உருகுவே வீரர்களுக்குப் பலன் கிட்டவில்லை.

ஆட்டத்தின்போது நடுவர் எடுத்த சில முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக அமையாததால் உருகுவே வீரர்கள் விரக்தி அடைந்தனர்.

ஆட்ட முடிவில் உருகுவே வீரர்கள் சிலர் நடுவரைச் சூழ்ந்துகொண்டு அவரிடம் ஆவேசமாக வாக்குவாதம் செய்தனர். ஒருவர், காணொளி நடுவருக்கான திரையை தள்ளிவிட்டுச் சென்றார்.

இந்நிலையில், ஜோசே மரியாவிற்கும் கோல்காப்பாளர் ஃபெர்னான்டோ மஸ்லேராவுக்கும் நான்கு ஆட்டங்களுக்கான தடையும் 20,000 சுவிஸ் ஃபிராங்க் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

எடின்சன் கவானி, டியேகோ கோடினுக்கு ஓர் ஆட்டத்திற்கான தடையும் 15,000 சுவிஸ் ஃபிராங்க் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சமூக சேவை செய்யவும் இவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், உருகுவே காற்பந்து சம்மேளனத்திற்கு 50,000 சுவிஸ் ஃபிராங்க் (S$70,248) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.