ஸ்டாக்ஹோம்: இங்கிலாந்துக் காற்பந்துக் குழுவின் முன்னாள் நிர்வாகியான சுவென் கோரான் எரிக்சன் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) உயிரிழந்தார். அவருக்கு வயது 76.
இங்கிலாந்துக் குழுவின் பிரிட்டிஷ் அல்லாத முதல் நிர்வாகியான எரிக்சனின்கீழ், அக்குழு மூன்று முக்கியத் தொடர்களில் காலிறுதிவரை முன்னேறியது. கடந்த 2001 முதல் 2006 வரை அவர் அக்குழுவின் நிர்வாகியாக இருந்தார்.
டேவிட் பெக்கம், பால் ஸ்கோல்ஸ், ஃபிராங்க் லாம்பார்ட், வெய்ன் ரூனி, ஸ்டீவன் ஜெரார்ட் போன்ற புகழ்பெற்ற பிரிட்டிஷ் வீரர்கள் அவரது நிர்வாகத்தின்கீழ் விளையாடியுள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், “மிஞ்சிப்போனால் இன்னும் ஓராண்டு உயிர்வாழ்வேன்,” என்று கடந்த ஜனவரி மாதம் கூறியிருந்தார்.
இந்நிலையில், “எரிக்சன் இறந்துவிட்டார். நீண்டநாள்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்தது,” என்று அவருடைய குடும்பத்தினர் திங்கட்கிழமையன்று தெரிவித்தனர்.
மான்செஸ்டர் சிட்டி, லெஸ்டர் சிட்டி (இரண்டும் பிரிட்டிஷ் குழுக்கள்), ரோமா, லாஸியோ (இரண்டும் இத்தாலியக் குழுக்கள்) உள்ளிட்ட 12 குழுக்களின் நிர்வாகியாகச் செயலாற்றியுள்ள எரிக்சன், மொத்தம் 18 வெற்றிக் கிண்ணங்களை வென்றுள்ளார்.
சுவீடனைச் சேர்ந்தவரான எரிக்சன், மெக்சிகோ, ஐவரி கோஸ்ட், பிலிப்பீன்ஸ் குழுக்களின் நிர்வாகியாகவும் இருந்துள்ளார்.
தமது 27 வயதுவரை காற்பந்து விளையாடிய எரிக்சன், 1977ஆம் ஆண்டிலிருந்து நிர்வாகியாகச் செயல்பட்டார்.