காற்பந்து: பிரேசிலை முதன்முறையாக தோற்கடித்தது மொரோக்கோ

1 mins read
1cd59478-80ef-4d41-bb2a-5012ae4d1d06
ஆட்ட முடிவில் உற்சாகத்துடன் காணப்படும் மொரோக்கோ பயிற்றுவிப்பாளரும் வீரர்களும். படம்: ஏஎஃப்பி -

மொரோக்கோவுக்கும் பிரேசிலுக்கும் இடையே சன்னிக்கிழமை (மார்ச் 25) பின்னிரவு நடைபெற்ற நட்புமுறை காற்பந்து ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் மொரோக்கோ வென்றது.

ஐந்து முறை உலகக் கிண்ண வெற்றியாளரான பிரேசிலை மொரோக்கோ தோற்கடித்திருப்பது இதுவே முதன்முறை.

கத்தாரில் கடந்த ஆண்டிறுதியில் நடந்து முடிந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் காலிறுதிச் சுற்றில் வெளியேறியது பிரேசில் அணி.

மற்றொரு புறம், அப்போட்டியில் மொரோக்கோவின் கனவுப் பயணம் ஈடேறியது. அரையிறுதிச் சுற்று வரை சென்ற அந்த அணி, பிரான்சிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.

இந்நிலையில், கத்தார் உலகக் கிண்ணப் போட்டியில் இடம்பெற்றிருந்த 23 ஆட்டக்காரர்கள் அடங்கிய பிரேசில் அணியில், 10 வீரர்கள் மட்டுமே இந்த ஆட்டத்தில் விளையாட மொரோக்கோ சென்றிருந்தனர்.

குறிப்பாக, காயம் காரணமாக பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை.

மொரோக்கோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தை 65,000 ரசிகர்கள் அரங்கில் கண்டுகளித்தனர்.