சிங்கப்பூர் காற்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஆர்சனல், நியூகாசல் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) இரவு 7.30 மணிக்குத் தேசிய விளையாட்டரங்கில் நடக்கிறது.
இதற்கு முன்னர் சிங்கப்பூருக்கு நியூகாசல் 1996ஆம் ஆண்டு வந்தது. அதனால் அதன் ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருக்கின்றனர்.
சிங்கப்பூர்க் காற்பந்துத் திருவிழாவின் இரண்டாவது ஆட்டம் இது. முதல் ஆட்டத்தில் ஆர்சனல், ஏசி மிலான் அணிகள் மோதின.
நட்புமுறையில் நடக்கும் இந்த ஆட்டம் ஆர்சனல், நியூகாசல் யுனைடெட் அணிகளுக்கு முக்கிய ஆட்டமாகக் கருதப்படுகிறது.
அடுத்த மாதம் இங்கிலிஷ் பிரிமியர் லீக் தொடங்கவுள்ளதால் இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சென்ற பருவத்தில் நியூகாசல் யுனைடெட் அணியின் நாயகனாக இருந்த அலெக்சாண்டர் ஐசக் சிங்கப்பூர் வரவில்லை. அவர் விரைவில் வேறு அணிக்கு மாறக்கூடும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், நியூகாசல் அணியில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடக்கூடிய பல வீரர்கள் உள்ளதால் ஆர்சனலுக்கு எதிரான ஆட்டத்தில் அனல் பறக்கக்கூடும்.
ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 25) மாலை தேசிய விளையாட்டரங்கில் ஆர்சனல் அணி பயிற்சி மேற்கொண்டது. அதைக் காணக் கிட்டத்தட்ட 12,000 ரசிகர்கள் திரண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
பயிற்சி முடிந்த பிறகு ஆர்சனல் விளையாட்டாளர்களை இளம் சிங்கப்பூர் காற்பந்தாட்டக்காரர்கள் 16 பேர் சந்தித்தனர்.
தங்கள் பயிற்சியைக் காண வந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சலிபா, டெக்லான் ரைஸ், சாக்கா, கய் ஹாவர்ட்ஸ் உள்ளிட்ட வீரர்கள் அவர்களுடன் படம் எடுத்துக்கொண்டனர், நினைவு கையெப்பமிட்டனர்.