கோலாலம்பூர்: ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் மலேசியா களமிறக்கிய ஏழு ஆட்டக்காரர்கள் தொடர்பாகச் சர்ச்சை எழுந்துள்ளது.
வெளிநாடுகளில் பிறந்த அந்த ஆட்டக்காரர்களுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டதாக மலேசியா கூறியது.
ஆனால், அவர்கள் மலேசியாவுக்கு விளையாடத் தகுதியானவர்கள் அல்லர் என்றும் அவர்கள் தகுதியானவர்கள் என்பதை காட்ட போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன என்றும் குற்றம் சுமத்தப்பட்டது.
அந்த ஏழு ஆட்டக்காரர்களுக்கு உலகக் காற்பந்துச் சம்மேளனம் (ஃபிஃபா) ஓராண்டு தடை விதித்துள்ளது.
அத்துடன், மலேசியக் காற்பந்துச் சங்கத்துக்கு 400,000 அமெரிக்க டாலர் (S$504,000) அபராதமும் விதிக்கப்பட்டது.
அந்த ஆட்டக்காரர்களுக்கு மலேசியாவில் முன்னோர்கள் இருந்ததாகக் கூறும் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததற்காக இத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மலேசியக் காற்பந்துச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் புதன்கிழமை (ஜனவரி 28) பதவி விலகினர்.
இது மலேசியக் காற்பந்துக்குக் கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஃபிஃபா விதித்த தடை, அபராதம் ஆகியவற்றை எதிர்த்து மலேசியக் காற்பந்துச் சங்கம், சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுத்துறைக்கான நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

