தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒலிம்பிக்: 40 ஆண்டுகளில் முதன்முறையாக இறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்

1 mins read
36142279-b5ea-44a6-9a3d-70bb74421285
பந்துக்கு மோதும் எகிப்து - பிரான்ஸ் வீரர்கள். - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: ஒலிம்பிக் போட்டிகளில் பிரான்ஸ் காற்பந்து அணி 40 ஆண்டுகளில் முதன்முறையாக இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.

போட்டிகளை ஏற்று நடத்தும் பிரான்ஸ், கூடுதல் நேரம் வரை சென்ற அரையிறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்தைத் தோற்கடித்தது.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே முன்னிலையை விட்டுத் தந்தது பிரான்ஸ். நடப்பு ஒலிம்பிக் போட்டிகளில் பிரான்ஸ் அணிக்கு எதிராக போட்டிகளில் எதிரணி போட்ட முதல் கோலும் இதுதான்.

அற்புதமாக கோலடித்து எகிப்திற்கு முன்னிலை பெற்றுத் தந்தார் மஹ்மூத் சாபர். ஆயினும், பதில் கோலடித்து ஆட்டத்தைச் சமனுக்குக் கொண்டுவந்தார் பிரான்சின் ஜேன் ஃபிலிப் மட்டேட்டா.

90 நிமிட ஆட்டம் 1-1 எனச் சமநிலையில் முடிந்ததால், ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது. அந்த அரைமணி நேரத்தில் மட்டேட்டாவும் ஒலிஸ் மிக்கெலும் ஆளுக்கு ஒரு கோலடித்து, பிரெஞ்சு அணியை இறுதிக்கு முன்னேறச் செய்தனர்.

ஆட்டம் முடிந்தபின் பேசிய பிரெஞ்சு அணிப் பயிற்றுநர் தியரி ஹென்றி, “என்ன ஓர் அற்புதமான இரவு! எல்லாப் புகழும் வீரர்களுக்கே. எகிப்து வீரர்களும் உண்மையிலேயே அருமையாக ஆடினர்,” என்று சொன்னார்.

இன்னோர் அரையிறுதியில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் மொரோக்கோவை வீழ்த்தியது.

இதனையடுத்து, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) நள்ளிரவு நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ், ஸ்பெயினை எதிர்த்தாடவுள்ளது.

குறிப்புச் சொற்கள்