பிரசல்ஸ்: நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் பெல்ஜியமும் பிரான்சும் மோதின.
இந்த ஆட்டம் அக்டோபர் 14ஆம் தேதியன்று பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸ் நகரில் நடைபெற்றது.
பிரான்சுக்காக இரண்டு கோல் போட்டு அக்குழுவின் வெற்றிக்கு வித்திட்டார் ரேன்டல் கோலோ முவானி.
2-1 எனும் கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை பிரான்ஸ் நெருங்கியுள்ளது.
சிறப்பாக விளையாடிய 25 வயது கோலோ முவானியை பிரெஞ்சுக் குழுவின் பயிற்றுவிப்பாளர் டிடியே டேஷோம் வெகுவாகப் பாராட்டினார்.
மற்றோர் ஆட்டத்தில் இஸ்ரேலை 4-1 எனும் கோல் கணக்கில் இத்தாலி பந்தாடியது.
இந்த ஆட்டம் இத்தாலியின் ஊடேனே நகரில் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
இஸ்ரேலில் போர் நிலவுவதால் பலத்த பாதுகாப்புடன் இந்த ஆட்டம் நடைபெற்றது.
ஆட்டத்துக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு பாலஸ்தீன ஆதரவாளர்கள் (கிட்டத்தட்ட 2,000 பேர்) ஊடேனே நகரில் அமைதி ஊர்வலம் சென்றனர்.
இஸ்ரேல் குழுவைக் காற்பந்துப் போட்டியிலிருந்து தடை செய்யக் கோரி அவர்கள் குரல் எழுப்பினர்.
இருப்பினும், ஆட்டம் தடையின்றி நடைபெற்றது.
கோல் மழை பொழிந்த இத்தாலி, இந்த வெற்றியின் மூலம் ஏ2 பிரிவில் பத்து புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது.
பிரான்ஸ் ஒன்பது புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.