மான்செஸ்டர்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ண காற்பந்துப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் தோல்வியின் பிடியில் சிக்கி வெளியேறியது.
அக்குழு எஃப்ஏ கிண்ணப் போட்டியின் நடப்பு வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் யுனைடெட்டும் ஃபுல்ஹம் குழுவும் மோதின.
இந்த ஆட்டம் யுனைடெட்டின் ஓல்டு டிராஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
முற்பாதி ஆட்டம் முடிய சில வினாடிகள் எஞ்சியிருந்தபோது ஃபுல்ஹம் குழுவுக்காக கெல்வின் பெசே கோல் போட்டார்.
பிற்பாதி ஆட்டத்தில் யுனைடெட்டின் புருனோ ஃபெர்னாண்டஸ் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார்.
கூடுதல் நேரத்துக்குப் பிறகு, ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷுட்அவுட் நடத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதில் 4-3 எனும் கோல் கணக்கில் ஃபுல்ஹம் வாகை சூடி காலிறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது.
யுனைடெட்டின் இரண்டு ‘பெனால்டி’ வாய்ப்புகளை ஃபுல்ஹம் குழுவின் கோல்காப்பாளர் பெர்ன்ட் லெனோ தடுத்து நிறுத்தி தமது குழுவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
காலிறுதி வாய்ப்பைத் தவறவிட்டது குறித்து மான்செஸ்டர் யுனைடெட்டின் நிர்வாகி ரூபன் அமோரிம் ஏமாற்றம் தெரிவித்தார்.

