தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரிஷப் பன்டுக்கு காம்பீர் ஆதரவு

2 mins read
4a4a6577-d52c-4e1b-b491-51b7a7b4b388
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணித்தலைவரான ரிஷப் பன்ட், நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் 446 ஓட்டங்களை எடுத்துள்ளார். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: அடுத்த மாதம் அமெரிக்காவிலும் வெஸ்ட் இண்டீசிலும் நடக்கவுள்ள உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் காப்பாளராக ரிஷப் பன்ட் செயல்பட வேண்டும் என்று அவ்வணியின் முன்னாள் வீரர் கௌதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் பன்ட், சஞ்சு சாம்சன் என இரு விக்கெட் காப்பாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2022 டிசம்பர் மாதம் கார் விபத்தில் படுகாயமடைந்த பன்ட், முழுமையாக உடல்நிலை தேறி, தற்போது இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், பன்ட், சாம்சன் இருவருமே சம திறன் படைத்த ஆட்டக்காரர்கள் எனக் குறிப்பிட்ட காம்பீர், ஆனாலும் அவர்களில் ஒருவருக்கு மட்டுமே அணியில் இடம் கிடைக்கும் என்று சொன்னார்.

“அவ்வகையில் பார்த்தால், இடக்கைப் பந்தடிப்பாளரான பன்ட் சேர்க்கப்பட வேண்டும் என நான் கூறுவேன். அவர் நடுவரிசைப் பந்தடிப்பாளர். அவரால் ஐந்து, ஆறு, ஏழாம் நிலைகளில் விளையாட முடியும். மாறாக, ஐபிஎல் போட்டிகளில் சஞ்சு மூன்றாம் நிலையில் களமிறங்கி வருகிறார். இந்திய அணியின் முன்வரிசை ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்டுவிட்டது,” என்று காம்பீர் கூறியுள்ளார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணித்தலைவரான பன்ட், நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் 446 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதே வேளையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணித்தலைவரான சாம்சன் 12 போட்டிகளில் 486 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை (மே 14) இரவு நடந்த போட்டியில் டெல்லி அணி 19 ஓட்டங்களில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியைத் தோற்கடித்தது.

குறிப்புச் சொற்கள்