தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய அணியின் தலைமைப் பயிற்றுநராக காம்பீர் நியமனம்

1 mins read
748f3fd0-a69c-4ff9-aeb2-700d7889c31a
கௌதம் காம்பீர். - கோப்புப்படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக அவ்வணியின் முன்னாள் தொடக்கப் பந்தடிப்பாளர் கௌதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கிண்ணத் தொடருடன் தலைமைப் பயிற்றுநர் பொறுப்பிலிருந்து ராகுல் டிராவிட் விலகினார்.

இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதிய பயிற்றுநருக்கு விண்ணப்பங்களை வரவேற்றது.

இந்நிலையில், காம்பீர், இந்திய அணி முன்னாள் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான டபிள்யூ.வி. ராமன் இருவரையும் பிசிசிஐ நேர்காணல் செய்தது.

அதனைத் தொடர்ந்து, இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக காம்பீர் செயல்படுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 9) அறிவித்தார்.

இதுபற்றி கருத்துரைத்த 42 வயதான காம்பீர், “மூவண்ணக் கொடி தாங்கி, என் நாட்டிற்கும் என் மக்களுக்கும் சேவையாற்றுவது மிகப் பெரிய கௌரவம்,” என்று கூறியுள்ளார்.

அவர் மூன்றரை ஆண்டுகளுக்கு, அதாவது 2027ஆம் ஆண்டு இறுதிவரை இந்திய அணியின் தலைமைப் பயிற்றுநராக நீடிப்பார்.

முன்னதாக, இந்திய அணியின் துணைப் பயிற்றுநர்களாக இருந்த விக்ரம் ரத்தோர், பரஸ் மம்பரே, திலீப் ஆகியோரும் பதவி விலகினர்.

இதனையடுத்து, இந்திய அணிக்காக முன்னர் ஆடிய அனுபவமுள்ள அபிஷேக் நாயர், ஆர் வினய்குமார் இருவரையும் துணைப் பயிற்றுநர்களாக நியமிக்குமாறு பிசிசிஐயிடம் காம்பீர் கேட்டுக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்