ஃபோக்ஸ்பரோ: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளது ஜெர்மனி. சிங்கப்பூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலை அமெரிக்காவின் ஃபோக்ஸ்பரோ நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பராகுவே அதற்கு அதிர்ச்சி கொடுத்தது.
பெனால்டி வாய்ப்புகளில் பராகுவே 4-3 எனும் கோல் கணக்கில் ஜெர்மனியை வெற்றிகண்டது. ஆட்ட நேரம் முடிந்த நிலையில் இரு அணிகளும் தரப்புக்கு ஒரு கோல் போட்டிருந்தன.
ஆட்டத்தின் முற்பாதி முடியும் தறுவாயில் 42வது நிமிடத்தில் பராகுவேயின் ஹூலியோ என்சிசோ தலையால் முட்டிய பந்து வலை சேர்ந்தது. 52வது நிமிடத்தில் ஆட்டத்தைச் சமன்படுத்தினார் ஜெர்மனியின் காய் ஹாவெர்ட்ஸ்.
அதன் பின்னர் இரு அணிகளாலும் கோல் போடமுடியவில்லை. கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் கோல் இல்லை.
ஆட்டம் பெனால்டிக்குச் சென்றது. முதலில் கொடுக்கப்பட்ட ஐந்து பெனால்டி வாய்ப்புகளில் இரு அணிகளுமே மூன்று கோல்களைப் போட்டன. மீண்டும் சமநிலை.
இறுதியில் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்கும் ஒரே கோல் வாய்ப்பு. ஜெர்மனியின் யோனத்தன் தா அடித்த பந்து வலைக் கம்பத்துக்கு மேலே சென்றது. அடுத்துவந்த பராகுவேயின் ஹோசே கனாலேயின் குறி தப்பவில்லை. வெற்றிக் கொண்டாட்டத்தில் திளைத்தது பராகுவே. அதிர்ச்சித் தோல்வியில் துவண்டது ஜெர்மனி. உலகக் கிண்ண வரலாற்றில், இதற்கு முன்னர் எந்தவோர் ஆட்டத்திலும் ஜெர்மனி பெனால்டியின் மூலம் தோல்வியுற்றதில்லை.
பராகுவே, அடுத்த சுற்றில் பிரான்ஸ் அல்லது சுவீடனை வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) ஃபிலடெல்ஃபியாவில் சந்திக்கும்.
பராகுவேயின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகச் செவ்வாய்க்கிழமையை தேசிய விடுமுறையாக அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் சான்டியாகோ பெனா. “இன்று நாடே கொண்டாடுகிறது,” என்று அவர், எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். விடுமுறைக்கான உத்தரவில் அவர் கையெழுத்திடும் படமும் பதிவுடன் இணைக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, அமெரிக்காவின் ஹியூஸ்டன் நகரில் நடைபெற்ற மற்றோர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் தப்பிப் பிழைத்திருக்கிறது பிரேசில்.
ஜப்பானைச் சந்தித்த அது 2-1 எனும் கோல் எண்ணிக்கையில் வெற்றிகண்டது. அந்த ஆட்டத்திலும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.
முதலில் ஜப்பானின் கால் ஓங்கியது.
ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் அந்த அணியின் கைஷூ சனோ அடித்த கோல் பிரேசில் ரசிகர்களின் நெஞ்சத்தில் இடியென இறங்கியது. இரண்டாம் பாதியில் விழித்தெழுந்தது பிரேசில். 56வது நிமிடத்தில் காஸமீரோ தலையால் முட்டி கோல் புகுத்தி ஆட்டத்தைச் சமப்படுத்தினார். 90வது நிமிடம் முடிவுற்ற நிலையில் இரு அணிகளுமே மேலும் எந்தவொரு கோலையும் போடவில்லை.
ஆட்டத்தின் 95வது நிமிடத்தில் கேப்ரியல் மார்ட்டினெலி புகுத்திய கோலால் பிரேசில் ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஜப்பானியக் காற்பந்துப் பிரியர்களின் இதயம் நொறுங்கியது.
பிரேசில், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அடுத்த சுற்றில் நார்வே அல்லது ஐவரி கோஸ்ட்டை எதிர்கொள்ளும்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இன்னோர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி காற்பந்து உலகை வியப்பில் ஆழ்த்தியது மொரோக்கோ. ஆட்டத்தின் முழுமையான நேரம் முடிந்தபோது கோல் எண்ணிக்கை 1-1 எனும் நிலையில் இருந்தது. நெதர்லாந்தின் கோலை 72வது நிமிடத்தில் கோடி கேக்போவும் மொரோக்கோவின் கோலை 91வது நிமிடத்தில் இஸ்ஸா டியோப்பும் போட்டனர். கூடுதல் நேரத்தில் கோல் விழவில்லை.
பின்னர் பெனால்டி வாய்ப்புகளில் வெற்றி கோலைப் புகுத்தினார் இஸ்மாயில் சைபரி. 3-2 எனும் கோல் கணக்கில் கரைசேர்ந்தது மொரோக்கோ. தோல்வியுற்றுத் துயரக் கடலில் மூழ்கியது நெதர்லாந்து. இதற்கு முன்னர் நடைபெற்ற 11 உலகக் கிண்ணப் போட்டிகளில், 16 அணிகள் கொண்ட சுற்றுக்கு அது தகுதிபெற்றது. இம்முறை அந்த வாய்ப்பை இழந்தது நெதர்லாந்து.

