கேப் டவுன்: அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்குக் கானா தகுதி பெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 12) கொமோரோசுக்கு எதிரான ஆட்டத்தின் 1-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கிண்ணப் போட்டியில் களமிறங்கும் வாய்ப்பை கானா உறுதி செய்தது.
கானாவின் வெற்றி கோலை ஆட்டத்தின் பிற்பாதியில் முகம்மது குடுஸ் போட்டார்.
இந்த ஆட்டம் கானா தலைநகர் ஆக்ராவில் நடைபெற்றது.
விளையாட்டரங்கில் நிரம்பி வழிந்த ஆதரவாளர் கூட்டம் கொண்டாட்ட மழையில் நனைந்தது.
அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஏற்று நடத்துகின்றன.
இப்போட்டிக்கு இதுவரை ஐந்து ஆப்பிரிக்க நாடுகள் தகுதி பெற்றுவிட்டன.
இதற்கு முன்பு நடந்த நான்கு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகளில் கானா களமிறங்கியது. 2010ஆம் ஆண்டில் அது காலிறுதி வரை சென்றது.