தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கில்லியாக நின்ற கில்; இங்கிலாந்து தோல்வி

2 mins read
6734dc54-bdad-4741-adb7-64b7560b528c
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கில் 87 ஓட்டங்களில் வெளியேறினார். - படம்: ஏஎஃப்பி

நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நாக்பூரில் வியாழக்கிழமை (பிப்ரவரி 6) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து அணி பந்தடித்தது.

தொடக்க வீரர்களான பில் சால்ட், பென் டக்கெட் சிறப்பாக ஆடி ஓட்டங்களைக் குவித்தனர். சால்ட் (43), டக்கெட் (32) அடுத்தடுத்து வெளியேற, இங்கிலாந்து அணி 111 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

அதன்பின்னர் அணித் தலைவர் ஜாஸ் பட்லர் 52 ஓட்டங்களும் ஜேக்கப் பெத்தல் 51 ஓட்டங்களும் எடுத்து ஓரளவு இங்கிலாந்தை தேற்றினர்.

இறுதியில் 47.4 ஓவர்களில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ஓட்டங்கள் எடுத்தது.

சுலபமான இலக்கை விரட்டிய இந்தியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ஓட்டங்களிலும் ரோஹித் சர்மா 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஷுப்மன் கில்லுடன் இணைந்த ஸ்ரேயஸ் ஐயர் சிறப்பாக விளையாடினார்.

ஸ்ரேயஸ் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 59 ஓட்டங்கள் எடுத்தார். அதன்பின்னர் வந்த அக்சர் பட்டேலும் 52 ஓட்டங்கள் குவித்தார்.

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கில் 87 ஓட்டங்களில் வெளியேறினார்.

இறுதியில் இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை கில் வென்றார்.

மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் 9ஆம் தேதி கட்டாக்கில் நடைபெற உள்ளது.

குறிப்புச் சொற்கள்