கோல் மழை: இங்கிலாந்துக்கு மூன்றாவது இடம், எம்பாப்பே சாதனை

கோல் மழை: இங்கிலாந்துக்கு மூன்றாவது இடம், எம்பாப்பே சாதனை

3 mins read
d2e3744f-71fb-4659-ab68-78039bde3915
இங்கிலாந்தின் நான்காவது கோலைப் போட்ட புக்காயோ சாக்கா (வலது). - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

மயாமி: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்சை 6-4 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.

அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியின் பிடியில் சிக்கி தங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை ஓரங்கட்டிவிட்டு இரு குழுக்களின் ஆட்டக்காரர்களும் கோல் வேட்டையில் இறங்கினர்.

14 ஆண்டுகாலப் பணிக்குப் பின், பிரான்சின் பயிற்றுவிப்பாளர் டிடியர் டெஷாம்ப் விடைபெறும் இந்த ஆட்டத்தில், பிரெஞ்சு அணித் தலைவர் கிலியன் எம்பாப்பே உலகக் கிண்ண வரலாற்றில் ஆக அதிக கோல்கள் போட்டவர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார். உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் எம்பாப்பே மொத்தம் 22 கோல்கள் போட்டுள்ளார்.

ஆட்டத்தின் முதல் பாதியிலேயே இங்கிலாந்து நான்கு கோல்களைப் போட்டு 4-0 என வலுவான முன்னிலையைப் பெற்றது. புக்காயோ சாக்கா மூன்று கோல்கள் போட்டு அசத்தினார்.

பிற்பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் தாக்குதல்களில் வேகம் காட்டி கோல்களைப் போட்டு அதன் அபார மீள்திறனை வெளிப்படுத்தியது.

பிரான்ஸ் தரப்பில் எம்பாப்பே இரண்டு கோல்களை போட்டு, இத்தொடரில் 10 கோல்களுடன் தங்கக் காலணி விருதுக்கான வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மேலும், பிரான்ஸ் வீரர் மைக்கல் ஒலிசே உலகக் கிண்ணப் போட்டியில் ஏழு கோல்களுக்கு வழிவகுத்து, 1970ஆம் ஆண்டில் பிரேசிலின் காற்பந்துச் சகாப்தம் பெலே படைத்த சாதனையை முறியடித்தார்.

இந்த ஆட்டத்தில் மொத்தம் பத்து கோல்கள் போடப்பட்டன.

இது விளையாட்டரங்கில் கூடியிருந்த ரசிகர்களுக்கு மட்டுமின்றி, உலகெங்கும் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோரின் கண்களுக்கும் விருந்தாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையன்று.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்தில் கோலை இங்கிலாந்தின் டெக்லன் ரைஸ் போட்டு இங்கிலாந்தை முன்னிலைக்குக் கொண்டு சென்றார். பிறகு ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் எஸ்‌ரி கொன்சா, ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் புக்காயோ சாக்கா ஆகியோர் இங்கிலாந்துக்காக கோல் போட்டனர்.

இடைவேளைக்குச் சில வினாடிகளே இருந்தபோது ஒரு கோலையும் ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பு மூலமாகவும் சாக்கா கோல்களைப் போட்டார்.

ஆட்டத்தின் 48வது, 66வது நிமிடங்களின் பிரான்சுக்காக எம்பாப்பே கோல்களைப் போட்டார்.

54வது நிமிடத்தில் பிரான்சின் பிராட்லி பார்கோலாவும் 90 நிமிடங்களுக்குப் பிறகு வழங்கப்படும் கூடுதல் சில நிமிடங்களில் ஒஸ்மான் டெம்பேலேயும் கோல்களைப் போட்டனர்.

இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜுட் பெலிங்ஹம் ஆட்டத்தின் கடைசி கோலை, அதாவது இங்கிலாந்தின் ஆறாவது கோலைப் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் போட்டுக் கொண்டாடினார். “இங்கிலாந்தின் அதிரடி ஆட்டம் பிரான்ஸ் குழுவினரைத் திணறடித்தது. முற்பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து ஆட்டக்காரர்களின் இடைவிடாத் தாக்குதல்களை அவர்கள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.

“இடைவேளையின்போது பிரான்ஸ் குழுவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அவை கைமேல் பலன் தந்தன என்றுதான் சொல்ல வேண்டும். மிகுந்த முனைப்புடன் விட்டுக்கொடுக்காமல் போராடிய பிரான்ஸ், கோல்களைப் போட்டது. இருப்பினும், இங்கிலாந்து நிதானத்தைக் கைவிடவில்லை. ஆட்டத்தைச் சமப்படுத்த பிரான்ஸ் குழுவால் இறுதிவரை முடியாமல் போனதை அடுத்து, இங்கிலாந்து வெற்றிக் கனியைச் சுவைத்தது.

“இதுவே இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஆக அதிக கோல்கள் போடப்பட்ட ஆட்டம். ஆனால், இது வெறும் மூன்றாவது நிலையில் வரும் குழுவை நிர்ணயிக்கும் ஆட்டமாக இருந்தது ஏமாற்றத்தைத் தந்தது,” என்று தலைமைப் பகுப்பாய்வாளரான 38 வயது அரவிந்த் ராஜ் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்
உலகக் கிண்ணம்காற்பந்துஇங்கிலாந்துபிரான்ஸ்

தொடர்புடைய செய்திகள்